மெதிவ்சின் பொறுப்பு தரங்க மற்றும் சந்திமாலுக்கு பிரித்து வழங்கப்பட்டது

1164

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வகையான போட்டிகளுக்குமான அணித் தலைவர் பதவியில் இருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளுக்காக புதிய அணித் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.  

மெதிவ்சின் ராஜினாமா மற்றும் புதிய அணித் தலைவர் தெரிவு என்பவற்றை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடொன்று இன்று இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இலங்கை டெஸ்ட் அணிக்கான புதிய தலைவராக தினேஷ் சந்திமாலும். சர்வதேச ஒரு நாள் மற்றும் T-20 அணிகளுக்கான புதிய தலைவராக உபுல் தரங்கவும் நியமிக்கப்பட்டனர். 

இலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து மெதிவ்ஸ் ராஜினாமா

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான இலங்கை அணியின் தலைமைப் …

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, ”தினேஷ் சந்திமாலை டெஸ்ட் அணியின் தலைவராகவும், ஏனைய இரண்டு போட்டிகளுக்குமான தலைவராக உபுல் தரங்கவையும் தெரிவு செய்ய உத்தேசித்து, நாம் தேர்வுக்குழுவுடனும் கலந்துரையாடியிருந்தோம். இந்த தீர்மானத்திற்கு எமது நிர்வாகக் குழுவும் சம்மதம் தெரிவித்ததன் காரணமாக இவர்கள் இருவரும் அணியின் தலைமையை ஏற்க உள்ளனர்.

அதே போன்று இவ்வளவு காலமும் சிறந்த முறையில் பங்காற்றிய அஞ்செலோ மெதிவ்சிற்கும் கிரிக்கெட் சபையின் சார்பாக நாம் நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றோம்” என்றார்.

அஞ்செலோ மெதிவ்சின் தலைமைப் பதவியிலான வெற்றி தோல்வி விபரம்

போட்டி வகை போட்டிகள் வெற்றி தோல்வி
டெஸ்ட் 34 13 15
ஒரு நாள் 98 47 45
T-20 12 4 7

தனது பதவி ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த அஞ்செலோ மெதிவ்ஸ்,

”இந்த முடிவை எடுப்பதில் எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. எனினும், கடந்த காலங்களில் அணியின் தலைமைப் பதவிக்கு சிறந்த ஒருவரை நியமிப்பது தொடர்பில் பல தடவைகள் சிந்தித்துள்ளேன். எனினும், அந்த நேரங்களில் அப்பதவிக்கு சிறந்த ஒருவர் இருக்காத காரணத்தினாலேயே நான் பதவியில் நீடித்திருந்தேன். எனினும், தற்பொழுது தரங்க, சந்திமால் போன்ற சிறந்த தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அணியை சிறந்த முறையில் வழிநடாத்துவார்கள்.

அடுத்து, 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்திற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே, அதற்கான சிறந்த ஆரம்பத்தைப் பெற வேண்டி உள்ளது. இவ்வாறான காரணங்களினால், நான் இந்தப் பதவியில் இருந்து விலகுவதற்கான சிறந்த தருணமாக இத்தருணத்தையே கருதுகின்றேன்” என்றார்.

அனுபவம் மிக்க வீரரான உபுல் தரங்க, கடந்த காலங்களில் இடம்பெற்ற தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களின்போதும் சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியின்போதும் உபாதைக்குள்ளாகியிருந்த அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்சிற்குப் பதிலாக அணியை தலைமையேற்று வழிநடாத்தினார்.

எனினும், குறித்த தொடர்களில் இலங்கை அணி சிறந்த வெற்றிகளைப் பதிவு செய்யவில்லை. எனினும், சிரேஷ்ட மற்றும் அனுபவ வீரராகவும், மெதிவ்சிற்கு அடுத்த படியாக அணியை வழிநடாத்தக்கூடிய தகுதி உள்ள வீரராகவும் தரங்கவே தற்பொழுது அணியில் உள்ளார்.

சந்திமால், அண்மைக்காலங்களில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டங்கள் காரணமாக ஒரு நாள் மற்றும் T-20 அணிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். எனினும், டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் தொடர்ந்து சிறந்த முறையில் அமைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், அணியைத் தலைமை ஏற்றதன் பின்னர் அதிக அழுத்தங்களை எதிர்கொள்ளவுள்ளார். எனவே, அவர் தன்னை மேலும் பல வகையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகுவார்.

இன்றைய ஊடக சந்திப்பின்போது, தனது நியமனம் குறித்து கருத்து வெளியிட்ட சந்திமால், “இவ்வளவு காலமும் சிறந்த ஒரு சேவையை வழங்கிய அஞ்செலோ மெதிவ்சிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோன்று, என்னை டெஸ்ட் அணியின் தலைவராக தெரிவு செய்த அனைவருக்கும் நன்றி. என்னை நம்பி டெஸ்ட் அணியை ஒப்படைத்துள்ளனர். அதற்காக என்னால் ஆன முழு பங்களிப்பையும் வழங்குவேன். அது போன்றே அனைவரது பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

30 ஆண்டுகளில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி

ஜிம்பாப்வேயிடமும் தொடர் தோல்வியை சந்தித்த தன் மூலம் இலங்கை அணி தனது…

உப தலைவர் நியமனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் தெரிவித்த சனத் ஜயசூரிய, இதுவரை நாம் எந்த ஒரு வீரரையும் உப தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கவில்லை. எனினும் அணியில் அனுபவம் மிக்க பலர் உள்ளனர். அணிக்கு பலரும் பங்களிப்பு வழங்குவார்கள் என்று நம்புகின்றோம். தேவையான நேரத்தில் உப தலைவர் ஒருவரை நியமிப்போம்” என்றார்.