லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் யாழ்ப்பாண நகரினை பிரதிநிதித்துவம் செய்யும், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தமது புதிய நிர்வாகக் குழுவினை அறிமுகம் செய்திருக்கின்றது.
>> முழுமையான பலத்தினை வெளிப்படுத்த காத்திருக்கும் ஜப்னா ஸ்டாலியன்ஸ்
அதன்படி, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் காணப்படுகின்ற பலம் பொருந்திய அணிகளில் ஒன்றான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) ஆனந்தன் ஆர்னல்ட் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த ஆனந்தன் ஆர்னல்ட் தற்பொழுது இங்கிலாந்தில் இருக்கின்ற BBK Partnership பட்டயக் கணக்கு (Chartered Accountant) நிறுவனத்தில் மூத்த பங்காளர்களில் ஒருவராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ஆர்வலராக இருக்கும் ஆனந்தன் ஆர்னல்ட், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பதும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும். அதோடு, மானிப்பாய் கீறின் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு நிதி திரட்டும் பணிக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற “Ride for Ceylon” சைக்கிளோட்டத் தொடரிலும் ஆர்னல்ட் பங்கேற்றிருக்கின்றார்.
அதேநேரம், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் முகாமையாளராக செயற்படும் பொறுப்பு கணேஷன் வாகீசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தவிர, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரின்டொன் பகிரதன் அணியினுடைய கிரிக்கெட் வளர்ச்சிக்குழுவின் பிரதி தலைவராக இருந்து யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கிரிக்கெட் விளையாட்டினை அபிவிருத்தி செய்வதற்காக பணிபுரியவிருக்கின்றார்.
ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இந்த நிர்வாகக்குழு நியமனங்கள் வடமாகாண கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<