ஒருநாள் அரங்கில் கன்னி வெற்றியை சுவைத்த நேபாளம்

477
Image Courtesy - ICC

நெதர்லாந்து மற்றும் நேபாள அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்று (03) அம்ஸ்டெல்வினீல் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், நேபாள அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்று, தங்களுடைய கன்னி ஒருநாள் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நேபாள அணி நிர்ணயித்திருந்த, 217 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து  அணி ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்து, தொடர் வெற்றியை கைநழுவவிட்டது.

கன்னி ஒருநாள் போட்டியில் நேபாள அணி நெதர்லாந்திடம் தோல்வி

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் அந்தஸ்தை கடந்த மார்ச் மாதம் பெற்றிருந்து நேபாள அணி, தங்களுடைய அறிமுக ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு கடந்த முதலாம் திகதி விளையாடியிருந்தது. இந்த போட்டியில் வெற்றிக்கான முயற்சிகளை நேபாள அணி மேற்கொண்டிருந்த போதும், போராடி 55 ஓட்டங்களால் தோல்விடைந்திருந்தது.

இந்த நிலையில் அறிமுக போட்டியில் அடைந்த தோல்விக்கு ஈடுகட்டும் வகையில், களமிறங்கிய நேபாள அணி இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அறிமுக வீரர்கள் மூவருடன் இன்றைய தினம் களமிறங்கிய நேபாள அணி ஆரம்பத்தில் தடுமாற்றமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.

நேபாள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை, நெதர்லாந்து அணியின் ஃபிரெட் கிளாசென் பதம் பார்த்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மல்லா 13 ஓட்டங்கள், கஹகுரெல் 19 ஓட்டங்கள் மற்றும் அடுத்து வந்த சாஹ் 4 ஓட்டங்கள் என குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர்.

எனினும் அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் பரஸ் கத்கா அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். இவர் நெதர்லாந்து பந்து வீச்சாளர்களை நேர்த்தியாக எதிர்கொண்டு, அரைச்சதம் கடந்து 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவருக்கு துணையாக பின்வரிசையில் துடுப்பெடுத்தாடிய சொம்பால் கமி அதிரடியாக 61 ஓட்டங்களை விளாசினார். சொம்பால் கமி 46 பந்துகளை எதிர்கொண்டு, 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களை குவிக்க, அவருடன் டிபெந்ரா சிங் அய்ரீ 19 ஓட்டங்களையும், ஆரீப் செயிக் 16 ஓட்டங்களை பெற்று, அணியின் ஓட்ட எண்ணிக்கையை 200 இற்கு மேல் உயர்த்தினர்.

இறுதியில் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த நேபாள அணி, 216 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நெதர்லாந்து அணியின் பந்து வீச்சில் ஃபிரெட் கிளாசென் 3 விக்கெட்டுகளையும், மைக்கல் ரிப்போன் மற்றும் பீட்டர் சீலர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணியின் ஆரம்ப விக்கெட் ஓட்டமெதுவும் பெறாமல் வீழ்த்தப்பட்டது. துடுப்பாட்டத்தில் அதிரடியை வெளிக்காட்டிய சொம்பால் கமி, நெதர்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸ்டீபன் மைபேர்கை போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து களமிறங்கிய பென் கூப்பர் 18 பந்துகளுக்கு 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, நெதர்லாந்து அணி 30 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.

தமிமின் சதத்தினால் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணிக்கு

எவ்வாறாயினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டேனியல் டெர் பிராக் மற்றும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான விக்கெட் காப்பாளர் வெஸ்லி பெரேசி ஆகியோர் அணிக்கு நம்பிக்கை தரும் இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தனர். இருவரும் 84 ஓட்டங்களை இணைப்பாட்டமாக குவிக்க, நேபாள அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர் சந்தீப் லெமைச்சேன் டேனியல் டெர் பிராக்கை 39 ஓட்டங்களுடன் வெளியேற்றினார். தொடர்ந்து அரைச்சதம் அடித்து, துடுப்பாட்டத்தில் அணியை வழிநடத்திய வெஸ்லி பெரேசி 8 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஆட்டமிழந்த நிலையில், நெதர்லாந்து அணி 143 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

தொடர்ந்து நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு நேபாள பந்துவீச்சாளர்கள் நெருக்கடியை கொடுக்கும் விதத்தில் பந்து வீசினர். இதில் சற்று தாக்குபிடித்த அணித் தலைவர் பீட்டர் சீலர் மாத்திரம் 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அடுத்து வந்த வீரர்கள் ஏமாற்றத்துடன் ஓய்வறை திரும்ப, நெதர்லாந்து அணி 185 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது தோல்வியின் இறுதிக்கட்டத்துக்கு சென்றது. போட்டி நிறைவடைந்து விட்டது என்று எண்ணும் தருணத்தில் நெதர்லாந்து அணியின் இறுதி வி்க்கெட் இணைப்பாட்டம் போட்டியை சூடுபிடிக்க வைத்தது.

இறுதி விக்கெட்டுக்காக இணைந்த ஃபிரெட் கிளாசென் மற்றும் போல் வென் மீகெரென் ஜோடி போட்டியை இறுதி பந்து வரை கொண்டு சென்றது. ஒரு ஓவருக்கு 6 ஓட்டங்கள் என்ற நிலையில், இறுதி ஓவரை நேபாள அணித் தலைவர் பரஸ் கத்கா வீசி, முதல் 5 பந்துகளுக்கும் நான்கு ஓட்டங்களை வழங்கியதுடன், இறுதி பந்தில் ரன்-அவுட் மூலமாக  கிளாசெனை ஆட்டமிழக்கச் செய்து அணியை ஒரு ஓட்டத்தால் த்ரில் வெற்றிபெறச் செய்தார். நேபாள அணி சார்பில், சந்தீப் லெமைச்சேன் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லலித் பஹண்டராய் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்றைய வெற்றியானது நேபாள கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பதிவாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் கடந்த மார்ச் மாதம், ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்ட நேபாள அணி தங்களுடைய முதல் ஒருநாள் வெற்றியை நெதர்லாந்து அணிக்கு எதிராக இன்று பெற்றுக் கொணடுள்ளது. தங்களுடைய கன்னி அறிமுக போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும், கன்னி ஒருநாள் தொடரில் முதல் வெற்றியை பெற்றுள்ள நேபாள அணி, தொடரையும் கைவிடாமால் 1-1 என சமப்படுத்தியது.

  • போட்டியின் ஆட்டநாயகன் – சொம்பால் கமி

போட்டியின் சுருக்கம்

நேபாளம் – 216 (48.5) – சொம்பால் கமி 61(46), பரஸ் கத்கா 51(69), ஃபிரெட் கிளாசென் 3/38

நெதர்லாந்து – 215 (50) – வெஸ்லி பெரேசி 71(89), டேனியல் டெர் பிராக் 39(83), சந்தீப் லெமைச்சேன் 3/41, லலித் பஹண்டராய் 2/43

முடிவு – நேபாளம் 1 ஓட்டத்தால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<