T20 உலகக் கிண்ணத்திற்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு

144
Netherlands squad announced
(Photo by Albert Perez-ICC/ICC via Getty Images)

நெதர்லாந்து கிரிக்கட் அணி T20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட தமது வீரர்கள் குழாத்தினை அறிவித்துள்ளது. 

>> T20i கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஷோன் வில்லியம்ஸ்

விக்கெட்காப்புத் துடுப்பாட்டவீரரான ஸ்கொட் எட்வார்ட்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான நெதர்லாந்து அணி, கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய வீரர்களினை பெரும்பாலும் கொண்டிருக்கின்றது

அதேநேரம் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான நெதர்லாந்து அணியில் முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான கொலின் ஏக்கர்மனுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. ஏக்கர்மன் இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான T20 பிளாஸ்ட் தொடரில் ஆடுவதன் காரணமாக T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவரோடு இடதுகை சுழல்பந்துவீச்சாளரான ரொலோப் வான் டி மெர்வெ இற்கும் உலகக் கிண்ணத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது

மறுமுனையில் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை உபாதை காரணமாக இழந்த முன்னாள் நியூசிலாந்து 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரரான டிம் பிரிங்கில் மற்றும் டேனியல் டோரம் ஆகியோர் T20 உலகக் கிண்ணத் தொடரின் முக்கிய சுழல்பந்துவீச்சாளர்களாக காணப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது

அணியின் ஏனைய வீரர்களை நோக்கும் போது அணித்தலைவர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் உடன் மெக்ஸ் ஒடோவ்ட் மற்றும் விக்ரம் சிங் ஆகியோர் முன்னணி துடுப்பாட்ட வீரர்களாக காணப்படுகின்றனர்.

அதேநேரம் பாஸ் டீ லீடெ, லோகன் வான் பீக் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் பிராட் கிளாசன் ஆகியோர் நெதர்லாந்து அணிக்கு வேகப்பந்துவீச்சாளர்களாக பலம் சேர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது 

>> வியாஸ்காந்துக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கான காரணத்தை கூறும் தேர்வுக்குழு!

நெதர்லாந்து அணியானது T20 உலகக் கிண்ணத் தொடரிற்கு முன்னதாக அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுடன் T20I தொடரில் விளையாடவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

நெதர்லாந்து T20 உலகக் கிண்ண குழாம் 

ஸ்கொட் எட்வார்ட்ஸ் (தலைவர்), மெக்ஸ் ஓடோவ்ட், விக்ரம் சிங், மைக்கல் லேவிட், வெஸ்லி பர்ரேஸி, சைபான்ட் எங்கல்ப்ரச்ட், டேஜா நிடாமனுரு, பாஸ் டீ லீ டே, லோகன் வான் பீக், டிம் பிரிங்கில், ஆர்யன் தட், டேனியல் டோரம், பிரட்ரிக் கிளாசன், போல் வான் மீக்கிரேன், விவியன் கிங்க்மா 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<