சமோவாவிடம் போராடி தோல்வியினை தழுவிய இலங்கை வலைப்பந்து அணி

410

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், இன்று (16) சமோவா வலைப்பந்து அணியினை எதிர்கொண்ட இலங்கை வலைப்பந்து அணி 65-55 என்கிற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

தர்ஜினியின் சாதனைப் புள்ளிகளுடன் இலங்கைக்கு இலகு வெற்றி

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், இன்று….

இங்கிலாந்தில் இடம்பெறும் 15ஆவது வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் 16 நாடுகளின் அணிகள் பங்கெடுக்கின்றன. இந்த வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாம் சுற்றில் விளையாடும் சந்தர்ப்பத்தை இலங்கை வலைப்பந்து அணி இழந்துள்ளது. எனினும், இத் தொடரில் 13 தொடக்கம் 16 வரையிலான இடத்தை பெறும் அணிகளை தெரிவு செய்யும் சுற்றில் ஆடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வலைப்பந்து அணி பெற்றுள்ளது. 

இந்த சுற்றில் இலங்கை வலைப்பந்து அணி நேற்று (15) சிங்கப்பூர் வலைப்பந்து அணியினை 88-50 என்கிற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்த நிலையில் இன்று சமோவா அணியினை எதிர்கொண்டது. 

லிவர்பூல் நகரின் எம்&எஸ் வங்கி அரங்கில் ஆரம்பமான போட்டியில் இலங்கை வலைப்பந்து அணி மெதுவான ஆரம்பத்தையே காட்டியது. எனினும், போட்டியின் முதல் கால்பகுதியினை இலங்கை வீராங்கனைகள் 17-13 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர். 

எனினும், போட்டியின் இரண்டாம் கால்பகுதியில் சமோவா வலைப்பந்து திறமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இலங்கையின் தடுப்புக்களை தகர்த்து புள்ளிகள் பெற்ற சமோவா போட்டியின் இரண்டாம் கால்பகுதியினை 19-10 என்கிற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியது. 

இதனால், போட்டியின் முதல் அரைப்பகுதியிலும் சமோவா 32-27 என்கிற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுக் கொண்டது. 

அதனை அடுத்து போட்டியின் மூன்றாம் கால்பகுதியிலும் சமோவா அணி தமது ஆதிக்கத்தை முன்னெடுத்தது. இலங்கை தரப்பினர் இந்த கால்பகுதியில் புள்ளிகள் பெற போராடியிருந்தனர். எனினும், மூன்றாம் கால்பகுதியினை நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் சமோவா வலைப்பந்து அணியே 17-13 என தம்வசமாக்கியது.  

அதன்படி, போட்டியின் மூன்றாம் கால்பகுதி நிறைவுக்கு வரும் போது 49-40 என்கிற புள்ளிகள் அடிப்படையில் சமோவா வலைப்பந்து அணி முன்னிலை பெற்றது. 

வடக்கு அயர்லாந்து அணியிடமும் போராடி தோல்வியினை தழுவிய இலங்கை

வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் தமது…

பின்னர் போட்டியின் இறுதிக் கால்பகுதியில் இலங்கை வீராங்கனகள் ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்தில் காணப்பட்ட சமோவா அணியினை வீழ்த்த பல வகைகளிலும் முயற்சி செய்தனர். எனினும் இறுதிக் கால்பகுதியிலும் சிறப்பாக செயற்பட்ட சமோவா அணி 16-15 என்கிற புள்ளிகள் கணக்கில் குறித்த பகுதியை தமதாக்கியதால் 65-55 என்கிற புள்ளிகள் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது.

இலங்கை வலைப்பந்து அணியின் சார்பில் 58 முயற்சிகளில் 52 புள்ளிகள் பெற்ற தர்ஜினி சிவலிங்கம் போட்டியில் அதகூடிய புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறினார். அதேநேரம், சமோவா அணியில் டோயா டனிமோ 42 புள்ளிகளுடன் தனது தரப்பில் அதிக புள்ளிகளை பெற்றிருந்தார். 

இலங்கை வலைப்பந்து அணி இந்த வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் அடுத்ததாக பிஜி வலைப்பந்து அணியினை நாளை (17) நடைபெறவுள்ள போட்டியில் எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<