வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில், தமது கடைசி குழுநிலை போட்டியில் அவுஸ்திரேலிய வலைப்பந்து அணியினை இன்று (14) எதிர்கொண்ட இலங்கை வலைப்பந்து அணி 99-24 என்ற புள்ளிகள் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 15ஆவது முறையாக நடைபெறும் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் இம்முறை 16 நாடுகளின் வலைப்பந்து அணிகள் நான்கு குழுக்களாக பங்கெடுக்கின்றன.
வடக்கு அயர்லாந்து அணியிடமும் போராடி தோல்வியினை தழுவிய இலங்கை
வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் தமது இரண்டாவது போட்டியில் வடக்கு…
இதில் குழு A இல் போட்டியிடும் இலங்கை வலைப்பந்து அணி தமது முதல் இரண்டு குழுநிலை போட்டிகளிலும் ஜிம்பாப்வே (79-49), வடக்கு அயர்லாந்து (67-50) ஆகிய வலைப்பந்து அணிகளுடன் தோல்வியைத் தழுவிய நிலையில் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற இப்போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்பார்த்த வண்ணம் வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரின் நடப்புச் சம்பியன்களான அவுஸ்திரேலிய வலைப்பந்து அணியினை எதிர் கொண்டிருந்தது.
இதேநேரம் வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் 11 தடவைகள் சம்பியன் பட்டம் வென்று, உலக வலைப்பந்து அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் பலம் மிக்க அவுஸ்திரேலிய வலைப்பந்து அணி தமது முன்னைய போட்டிகளில் ஜிம்பாப்வே (73-37), வடக்கு அயர்லாந்து (88-24) ஆகிய வலைப்பந்து அணிகளுக்கு எதிராக இலகு வெற்றிகளை பதிவு செய்திருந்த நிலையில் இலங்கை வலைப்பந்து அணியை எதிர் கொண்டது.
தொடர்ந்து லிவர்பூல் எம்&எஸ் அரங்கில் தொடங்கிய போட்டியில் மிகவும் வலிமையான தடுப்போடு (Defense) போட்டியில் முன்னேறிய அவுஸ்திரேலிய வலைப்பந்து அணி போட்டியின் முதல் கால்பகுதியில் 20 புள்ளிகளை எடுத்துக் கொண்டது. எனினும், இலங்கை வலைப்பந்து அணி 7 புள்ளிகளையே போட்டியின் முதல் கால்பகுதியில் பெற்றது. இதனால், அவுஸ்திரேலிய மங்கைகள் போட்டியின் முதல் கால்பகுதியை 20-7 என்ற புள்ளிகள் அடிப்படையில் தமதாக்கினர்.
போட்டியின் இரண்டாம் கால்பகுதியிலும் முதல் கால்பகுதி போன்ற ஒருநிலையே நீடித்தது. இந்த கால்பகுதியிலும் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலிய மங்கைகள் இந்த கால்பகுதியை 27-8 என்ற புள்ளிகள் அடிப்படையில் தம்வசமாக்கினர். அதன்படி, போட்டியின் முதல் அரைப்பகுதியில் அவுஸ்திரேலிய வலைப்பந்து அணி 47-15 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றுக் கொண்டது.
போட்டியில் மூன்றாம் கால்பகுதியிலும் இலங்கை வலைப்பந்து அணி முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவுஸ்திரேலிய வலைப்பந்து அணியின் தடுப்புக்களை தாண்டி புள்ளிகள் பெறுவது கடினமாக இருந்தது. இதேநேரம், அசத்தலாக செயற்பட்ட அவுஸ்திரேலிய வலைப்பந்து அணி போட்டியின் மூன்றாம் கால்பகுதியை 28-7 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி 75-22 என போட்டியில் தமது ஆதிக்கத்தினை தொடர்ந்தது.
உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கைக்குத் தோல்வி
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று ஆரம்பித்துள்ள வலைப்பந்தாட்ட உலகக்…
போட்டியின் இறுதிக் கால்பகுதியிலும் ஏனைய கால்பகுதிகள் போன்று அபாரமாக செயற்பட்ட அவுஸ்திரேலிய வலைப்பந்து அணி இறுதிக் கால்பகுதியையும் 24-2 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி போட்டியில் 99-24 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியை தோற்கடித்தது.
அவுஸ்திரேலிய வலைப்பந்து அணியின் சார்பாக கெயிட்லின் த்வைட்ஸ் 66 முயற்சிகளில் 65 புள்ளிகள் பெற்று போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற வீராங்கனையாக மாறினார். அதேநேரம், இலங்கை வலைப்பந்து அணியில் 16 புள்ளிகளுடன் தர்ஜினி சிவலிங்கம் தனது தரப்பில் அதிக புள்ளிகள் பெற்றவராக இருந்தார்.
இப்போட்டியில் தோல்வியைத் தழுவியிருக்கும் இலங்கை வலைப்பந்து அணி, வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருக்கின்றது. எனினும், இலங்கை வலைப்பந்து அணி இந்த வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் 13ஆவது தொடக்கம் 16ஆவது வரையிலான இடத்தில் உள்ள அணிகளை தெரிவு செய்யும் சுற்றில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இன்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளின் முடிவுகள்
- நியுசிலாந்து எதிர் சிங்கப்பூர் – நியுசிலாந்து 89-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- மலாவி எதிர் பார்படோஸ் – மலாவி 65-41 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- இங்கிலாந்து எதிர் சமோவா – இங்கிலாந்து 90-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- உகண்டா எதிர் ஸ்கொட்லாந்து – உகண்டா 53-42 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- வடக்கு அயர்லாந்து எதிர் ஜிம்பாப்வே – ஜிம்பாப்வே 51-49 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- ஜமெய்க்கா எதிர் தென்னாபிரிக்கா – தென்னாபிரிக்கா 55-52 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
- ட்ரினாட் & டொபாகோ எதிர் பிஜி – ட்ரினாட் & டொபாகோ 67-56 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி
>>மேலும் பல சுவையான விளையாட்டு செய்திகளைப் படிக்க<<