உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்தில் இலங்கை ஏ குழுவில்

495

இங்கிலாந்தின் லிவர்பூலில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் இலங்கை அணி ஏ குழுவில் இடம்பெற்றுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளை குலுக்கள் முறையில் குழுநிலைப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இங்கிலாந்தின் நொட்டின்ஹம்மில் இடம்பெற்றது.  

உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்

உலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த …

இப்போட்டித் தொடருக்காக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜமைக்கா, தென்னாபிரிக்கா மற்றும் மலாவி ஆகிய நாடுகளுடன், போட்டியை நடாத்தும் இங்கிலாந்து என்பன நேரடியாகத் தகுதி பெற்றன.

இதில், ஐரோப்பிய கண்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிஜீ தீவுகள், சமோவா ஆகிய அணிகளும், ஆபிரிக்க பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி உகண்டா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளும், அமெரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த ட்ரினிடாட் எண்ட் டொபேகோ மற்றும் பார்படோஸ் ஆகிய அணிகளும் தெரிவாகின.

இதுஇவ்வாறிருக்க, ஆசிய கண்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நடப்பு ஆசிய சம்பியனான இலங்கை மற்றும் சிங்கப்பூர் அணிகள் தெரிவாகியிருந்தன.

இதன்படி, குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி, உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள பிரபல அவுஸ்திரேலியா, 8ஆவது இடத்தில் உள்ள வட அயர்லாந்து, 13ஆவது இடத்தில் உள்ள ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற போட்டிகளை மாத்திரம் கருத்திற்கொண்டு வெளியிடப்பட்டுள்ள உலக வலைப்பந்தாட்ட அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி, 26ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், பி குழுவில் நியூசிலாந்து, மலாவி, பார்படோஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

அத்துடன், ஜமைக்கா, தென்னாபிரிக்கா, ட்ரினிடாட் எண்ட் டொபேகோ, மற்றும் பீஜி தீவுகள் சி குழுவிலும், இங்கிலாந்து, உகண்டா, ஸ்கொட்லாந்து மற்றும் சமோவா ஆகிய நாடுகள் டி குழுவிலும் இடம்பெற்றுள்ளன.

உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் அடுத்த வருடம் ஜுலை மாதம் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையும், இரண்டாவது சுற்றுப் போட்டிகள் 15 முதல் 18ஆம் திகதி வரையும், அரையிறுதி மற்றம் இறுதிப் போட்டிகள் 19 முதல் 21ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் கிண்ணம் இலங்கை அணிக்கு

சிங்கப்பூரின் OCBC அரங்கில் இன்று (9) நடைபெற்று …

இதில் இலங்கை அணி, ஜுலை 12ஆம் திகதி ஜிம்பாப்வே அணியுடனான முதல் போட்டியில் களமிறங்கவுள்ளதுடன், 13ஆம் திகதி வட அயர்லாந்துடனும், 14ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியுடனும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதேநேரம், 15ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரின் தூதுவராக இங்கிலாந்து வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையான ஜேட் க்ளர்க் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, இறுதியாக 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணி சம்பியனாகத் தெரிவாகியதுடன், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டன.

இதேநேரம், 16 அணிகள் பங்குபற்றிய குறித்த போட்டித் தொடரில் இலங்கைக்கு கடைசி இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது.