இந்த (2023) ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆறாவது அணியாக நேபாள கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. அத்துடன் இந்த வாய்ப்பு மூலம் முதன் முறையாக ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடுகின்ற சந்தர்ப்பத்தினையும் நேபாளம் பெற்றிருக்கின்றது.
இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஒருநாள் போட்டிகளாக நடைபெறுகின்றது. இந்த தொடரினை நடாத்தும் உரிமையினை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கொண்டிருக்கின்றது. ஆறு அணிகள் பங்குபெறும் இந்த தொடருக்கு ஐ.சி.சி. இன் முழு அங்கத்துவத்தினை கொண்டிருக்கும் நாடுகளான தொடரின் நடப்புச் சம்பியன் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் நேரடித் தகுதி பெற்றிருக்கின்றன.
RCB அணியில் இணையும் வர்ணனையாளர்
இந்த நிலையில் தொடரில் பங்கெடுக்கும் எஞ்சிய அணியினை தெரிவு செய்வதற்காக ஆசிய கிரிக்கெட் கவுண்சில் (ACC), ஆசிய பிரீமியர் கோப்பை (ACC Premier Cup) என்னும் பெயரிலான தகுதிகாண் ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
ஏப்ரல் மாதம் 18ஆம் திகதியில் இருந்து நேபாளத்தில் நடைபெற்று வரும் இந்த தகுதிகாண் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்குபற்றியிருந்ததோடு, தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாள அணிகள் தெரிவாகின.
திங்கட்கிழமை (01) போட்டியின் இறுதிப் போட்டி கத்மண்டுவில் ஆரம்பமான நிலையில் போட்டியில் முதலில் துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 33.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
ஐக்கிய அரபு இராச்சிய அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஆசிப் கான் 46 ஓட்டங்கள் எடுத்தார். நேபாள பந்துவீச்சில் லலித் ராஜ்பன்சி 04 விக்கெட்டுக்கள் சாய்க்க, கரன் KC மற்றும் சந்தீப் லமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர்.
பின்னர் நேற்று பெய்த மழையின் காரணமாக ஆட்டத்தை தொடர முடியாத நிலையில், மேலதிக நாளான இன்று (02) போட்டி தொடர்ந்தது. போட்டியின் வெற்றி இலக்கான 118 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய நேபாள அணி குறித்த இலக்கை 30.3 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 118 ஓட்டங்களுடன் அடைந்தது.
நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்த குல்ஷான் ஜா அரைச்சதம் விளாசி 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார். ஐக்கிய அரபு இராச்சிய அணிக்காக ரோஹான் முஸ்தபா 02 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அது வீணானது.
அந்தவகையில் இந்த வெற்றியுடன் ஆசியக் கிண்ணத் தொடருக்கான வாய்ப்பினைப் பெற்றுள்ள நேபாள அணி ஆசியக் கிண்ணத் தொடரின் குழு A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளதோடு, இந்த தொடரின் குழு B இல் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<