பிரபல NCC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த பதுரேலிய விளையாட்டுக் கழகம்

349
NCC vs Bdureliya

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் பிரீமியர் லீக் தொடரின் ‘A’ மட்டத்திற்கான போட்டியொன்றில் பிரபல NCC அணிக்கு அதிர்ச்சி கொடுத்த பதுரேலிய விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

சர்ரே விலேஜ் மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமானதுடன், நாணய சுழற்சியில் வென்ற பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான துவிந்து திலகரத்ன அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுக்களை பதம்பார்க்க, NCC அணி முதல் இன்னிங்சில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மேலும் அலங்கார அசங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். துடுப்பாட்டத்தில் பவன் விக்ரமசிங்க 42 ஓட்டங்களையும், திமிர ஜயசிங்க 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அடுத்து தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பதுரேலிய விளையாட்டுக் கழகம், நதீர நாவல (86), ஷெஹான் பெர்னாண்டோ (85) மற்றும் சஹன் விஜேரத்ன (79) ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தின் உதவியுடன் 330 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்து வீச்சில் பிரகாசித்த NCC அணியின் தரிந்து கௌஷால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், சதுரங்க டி சில்வா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

145 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த NCC அணி, 179 ஓட்டங்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், இறுதி விக்கெட்டிற்காக 60 ஓட்டங்களை குவித்ததன் காரணமாக 239 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முதல் இன்னிங்சை போன்றே அபாரமான பந்து வீச்சில் ஈடுபட்ட துவிந்து திலகரத்ன இம்முறை 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். துடுப்பாட்டத்தில் NCC அணியின் பவன் விக்ரமசிங்க மற்றும் கீழ்வரிசை வீரர் தரிந்து கௌஷால் ஆகியோர் அதிகபட்சமாக தலா 41 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் 96 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய பதுரேலிய அணி, 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் வெற்றியை பெற்றுக் கொண்டது. மீண்டும் துடுப்பாட்டத்தில் அசத்திய நதீர நாவல ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 185 (44.4) – பவன் விக்ரமசிங்க 42, திமிர ஜயசிங்க 41, துவிந்து திலகரத்ன 6/78, அலங்கார அசங்க 3/41

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 330 (85.5) – நதீர நாவல 86, ஷெஹான் பெர்னாண்டோ 85, சஹன் விஜேரத்ன 79, தரிந்து கௌஷால் 5/86, சதுரங்க டி சில்வா 4/139

NCC கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 239 (55.4) – தரிந்து கௌஷால் 41, பவன் விக்ரமசிங்க 41, துவிந்து திலகரத்ன 5/81, அலங்கார அசங்க 3/84

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 96/3 (15.3) – நதீர நாவல 51*, சதுரங்க டி சில்வா 2/37

முடிவு: பதுரேலிய விளையாட்டுக் கழகம் 7 விக்கெட்டுகளினால் வெற்றி.

அணிகள் பெற்றுக் கொண்ட புள்ளிகள்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் – 17.13
NCC கழகம் – 4.07