இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகப்பூர்வ சுகாதாரப் பங்காளராக இலங்கையின் முன்னணி வைத்தியசாலைகளில் ஒன்றான நவலோக தனியார் வைத்தியசாலை (Nawaloka Hospitals PLC) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன்படி, 2021 ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும 3 ஆண்டுகளுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் சுகாதாரப் பங்காளராக நவலோக தனியார் வைத்தியசாலை செயல்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆடவுள்ள இலங்கை குழாம் வெளியீடு
எனவே, குறித்த காலப்பகுதியில் அனுசரணைக்கான பணத்துடன், இலங்கை கிரிக்கெட் சபைக்குக் தேவையான சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல விடயங்கள் நவலோக தனியார் வைத்தியசாலையினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இலங்கை கிரிக்கெட் சபையினால் பெயரிடப்படுகின்ற நபருக்கு முதலுதவி பயிற்சியும் நவலோக வைத்தியசாலையினால் வழங்கப்படவுள்ளதுடன், ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அனைத்து வீரர்களுக்கும் இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து ஆய்வுகூட வசதிகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னணி வைத்தியசாலையாக வலம்வருகின்ற நவலோக வைத்தியசாலை, நவலோக என்ற நாமத்துடன் தொழில்துறை, கட்டிட நிர்மாணம், கல்வி மற்றும் மக்கள் அன்றாடம் நுகர்வுக்குப் பயன்படுத்துகின்ற பொருட்கள் என பல துறைகளில் ஒரு பல்துறை நிறுவனமாக தன்னுடைய சேவையை வழங்கி வருகின்றது.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் நவலோக வைத்தியசாலைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
”இலங்கையில் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் அதிகம் பேசப்படுகின்ற இந்தக் காலப்பகுதியில் நாட்டின் முன்னணி மற்றும் மிகவும் கௌரவத்தைப் பெற்ற நவலோக தனியார் வைத்தியசாலையுடன் ஒரு பங்காளராக செயல்படுவதற்கு கிடைத்தமை தொடர்பில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்” என தெரிவித்தார்.
இதேவேளை, நவலோக வைத்தியசாலையின் பிரதித் தலைவர் ஹர்ஷித் தர்மதாஸ கருத்து தெரிவிக்கையில்,
”நம் நாட்டில் மட்டுமல்ல, உலகின் அனைத்து விளையாட்டுக்களும் முகங்கொடுக்கின்ற ஒரு முக்கியமான கட்டத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் ஒன்றுசேர வாய்ப்பு கிடைத்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்.
நவலோக சுகாதாரத் துறையில் ஒரு முன்னணி நிறுவனம், இலங்கையில் கிரிக்கெட்டின் வலுவான வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவளிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<