விராட் கோலியே முதலில் சண்டையை ஆரம்பித்தார் – மனம் திறந்த நவீன் உல் ஹக்

315

இந்த ஆண்டுக்கான IPL போட்டித் தொடரின் போது விராட் கோலியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து முதன் முதலாக ஆப்கானிஸ்தான் இளம் வேகப்பந்துவீச்சாளரான நவீன் உல் ஹக் மனம் திறந்திருக்கின்றார்.

கடந்த மே மாதம் 01ஆம் திகதி நடைபெற்று  முடிந்த IPL தொடரின் 43ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதியிருந்தன.

>>இலங்கை தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு<<

இந்த போட்டியின் போது விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையே மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இது போட்டி நிறைவடைந்த பின்னரும் நீடிக்க, இந்த வாக்குவாதத்தில் லக்னோவ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்த கெளதம் கம்பீரும் ஈடுபட்டதனை அடுத்து விடயம் பூதாகரமாக மாறியது.

இதன் பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன் உல்-ஹக், விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோருக்கு அபாரதம் விதிக்கப்பட்டது. இதில் விராட் கோலி பாரியதொரு தொகையினை (இலங்கை நாணயப்படி சுமார் 3.5 கோடி) அபாரதமாக செலுத்த கட்டளையிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் மெளனம் காத்து வந்திருந்த ஆப்கான் வீரர் நவீன்-உல்-ஹக், BBC செய்திச் சேவைக்கு இது தொடர்பில் பேட்டியொன்றை தற்போது வழங்கியிருக்கின்றார்.

குறித்த பேட்டியில் விராட் கோலியே முதலில் சண்டையை தொடங்கியதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

“போட்டியின் போதும் சரி, போட்டி நிறைவடைந்த பின்னரும் சரி அவர் (விராட் கோலி) அப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது. ஆட்டம் முடிந்த பிறகு வீரர்கள் கைகுலுக்கும் போதும் கூட, விராட் கோலியே சண்டையைத் தொடங்கினார்.” என நவீன் உல் ஹக் கூறினார்.

இதேநேரம் தான் சண்டையை தொடங்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டிய நவீன் உல் ஹக் அதற்கு கோலி மீது விதிக்கப்பட்ட அபாரதம் சான்று எனக் கூறியிருந்தார்.

“விதிக்கப்பட்ட அபராதத்தைப் பார்த்தாலே, சண்டையைத் தொடங்கியது யார் என்பது உங்களுக்குத் தெரிய வரும். நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்கின்றேன். பொதுவாக நான் யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது கிடையாது. அப்படி ஈடுபட்டாலும், பந்துவீசும்போது பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் துடுப்பாட்டவீரரிடம் தான் வாக்குவாதத்தில் ஈடுபடுவேன்.” என்றார்.

>>அமெரிக்காவில் மீண்டும் ஒன்றுகூடும் CSK நட்சத்திரங்கள்!<<

விராட் கோலி – நவீன் உல் ஹக் இடையிலான சண்டை குறித்த போட்டியில் நவீன் உல் ஹக் துடுப்பாடும் சந்தர்ப்பத்திலேயே உக்கிரம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் சண்டையின் போதும் தான் விடயங்களை நிதானமாக கையாண்டதாகவும் நவீன் உல் ஹக் சுட்டிக் காட்டியிருந்தார்.

“இந்த ஆட்டத்தில் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. அந்த சூழலை நான் எப்படி கையாண்டேன் என்பது அங்கிருந்த வீரர்களுக்குத் தெரியும். துடுப்பாட்டத்தின் போதும், ஆட்டம் நிறைவடைந்த பிறகும் என்னுடைய நிதானத்தை நான் இழக்கவில்லை. ஆட்டம் நிறைவுக்கு வந்த பிறகு நான் செய்ததை எல்லோருமே பார்க்கலாம். வீரர்களுடன் கைகுலுக்கினேன். அவ்வளவுதான். கோலி என்னுடைய கையை பலமாகப் பிடித்தார். நானும் மனிதன் என்பதால் இதற்கு எதிர்வினையாற்றினேன்.” என நவீன் குறிப்பிட்டு பேட்டியை நிறைவு செய்திருந்தார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<