பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளராக மாறும் நவீட் நவாஸ்

150

இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்டப் பயிற்சியாளராக காணப்பட்ட நவீட் நவாஸினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அந்த நாட்டின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணிப் பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது.

>>T20 உலகக் கிண்ணப் பயிற்சி மோதலை வெற்றியுடன் நிறைவு செய்த இலங்கை அணி

அதன்படி பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும், அந்த நாட்டின் ஏனைய வயதுக் குழுக்களுக்கான  (Age Group Teams) அணிகளின் துடுப்பாட்ட ஆலோசராகவும் நவீட் நவாஸ் செயற்படவிருக்கின்றார்.

பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னர் செயற்பட்ட ஸ்டுவார்ட் லோவ், ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளாரக நியமிக்கப்பட்ட நிலையிலேயே நவாஸின் நியமனம் புதிதாக இடம்பெற்றிருக்கின்றது.

அதேநேரம் நவீட் நவாஸ் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பினை ஜூலை 1ஆம் திகதியில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு நவீட் நவாஸ் பயிற்சியாளராக செயற்படுவது இம்முறை இரண்டாவது தடவையாகும். முன்னர் 2018-2020 காலப்பகுதியில் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயற்பட்ட நவீட் நவாஸ் 2020ஆம் ஆண்டுக்கான இளையோர் உலகக் கிண்ணத் தொடரினை பங்களாதேஷ் வெல்ல முக்கிய காரணமாக அமைந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<