தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் சம்மேளனம் மற்றும் திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 152 புள்ளிகளைப் பெற்ற கம்பஹா மாவட்டம் தொடர்ச்சியாக 4 ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
88 புள்ளிகளைப் பெற்ற புத்தளம் மாவட்டம் 2 ஆவது இடத்தையும், 100 புள்ளிகளைப் பெற்ற கேகாலை மாவட்டம் 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது. இந்த நிலையில், கடந்த வருடம் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடங்களைப் முறையே பெற்றுக்கொண்ட கொழும்பு, கண்டி மாவட்டங்களுக்கு இம்முறை 5 ஆவது, 11 ஆவது இடங்கள் கிடைத்ததுடன், மன்னார் மாவட்டம் எந்தவொரு பதக்கத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தேசிய இளைஞர் மெய்வல்லுனர் இரண்டாம் நாள் முடிவுகள்
மாத்தறை கொடவில விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றுவந்த 30 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் நாடளாவிய ரீதியில் இருந்து 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3000 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
20 வயதுக்கு உட்பட்ட மற்றும் 20 வயதுக்கு மேற்பட்ட வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற இம்முறை போட்டிகளின் முடிவில் 6 புதிய போட்டிச் சாதனைகள் முறிடிக்கப்பட்டன.
தெற்காசிய, ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 400 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் நடப்புச் சம்பியனான மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த அருண தர்ஷன, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் அதி சிறந்த மெய்வல்லுனராகத் தெரிவாகினார்.
இம்முறை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தை 21.33 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்று அதி சிறந்த ஆண் மெய்வல்லுனராகத் தெரிவாகினார்.
அத்துடன், குறித்த வயதுப் பிரிவில் பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 11.95 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த நகர இளைஞர் அணியைச் சேர்ந்த (கொழும்பு மாவட்டம்) ரந்தி நிமாஷா குரே, அதி சிறந்த பெண் மெய்வல்லுனராகத் தெரிவானார். இவர் இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவிலும் அதி சிறந்த பெண் மெய்வல்லுனராகத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் 20 வயதுக்கு மேற்பட்ட வயதுப் பிரிவில் அதி சிறந்த ஆண் மெய்வல்லுனராக தேசிய நீளம் பாய்தல் வீரரான புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அமில ஜயசிறி தெரிவாகியதுடன், 400 மீற்றர் ஓட்டத்தில் தேசிய வீராங்கனைகளில் ஒருவரான அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நதீஷா ராமநாயக்க, அதி சிறந்த பெண் மெய்வல்லுனருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
இது இவ்வாறிருக்க, கடந்த 3 தினங்களாக நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் தமிழ் பேசும் வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
தேசிய இளைஞர் மெய்வல்லுனரில் கிழக்குக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்கள்
இதில் மலையகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களையும், வட மாகாண வீரர்கள் 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் 2 தங்கம் மற்றும் 6 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
அதிவேக வீராங்கனையானார் சபியா
கடந்த 5 வருடங்களாக பாடசாலை மட்டப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற கண்டி விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், இன்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 12.57 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சபியா, போட்டிகளின் முதல் நாளன்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 25.86 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.
இந்நிலையில், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷட மெய்வல்லுனர் போட்டியிலும் 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சபியா, கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிந்துஷனுக்கு 3ஆவது இடம்
போட்டிகளின் 3 ஆவது நாளான இன்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்டம் சார்பாக பங்குகொண்ட எஸ். கிந்துஷன் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை நிறைவு செய்ய 35 நிமிடங்கள் 20.51 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.
கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதனிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன், பாடசாலை மட்டப் போட்டிகளில் 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளையும் பெற்று வருகின்றார். இந்த நிலையில், கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த அவர், பலத்த போட்டிக்கு மத்தியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார்.
முல்லைத்தீவு வீராங்கனைகள் அபாரம்
இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்தில் முல்லைத்தீவு அணி வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவு செய்ய 5 நிமிடங்கள் 07.34 செக்கன்களை அந்த அணி எடுத்துக்கொண்டது.
இதேநேரம், வெண்கலம் வென்ற முல்லைத்தீவு மாவட்ட அஞ்சலோட்ட அணியில் பி. கவின்சா, என். கிரியா, எஸ்.விதூஷா மற்றும் ஆர். சர்மிலா ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தனர்.
அஞ்சலோட்டத்தில் அம்பாறைக்கு கௌரவம்
20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 4 x 100 மற்றும் 4 x 400 ஆகிய அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குகொண்ட அம்பாறை மாவட்ட அணிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை சுவீகரித்தன.
தேசிய இளைஞர் விளையாட்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய சாய்ந்தமருது பிரதேச இளைஞர் அணி, 4 x 100 அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த அணியில் இடம்பெற்ற யூசுப் ரகீப், அஷாத் கான், ஏ. சம்லி மற்றும் மஸ்பூத் ஆகிய நான்கு வீரர்களும் கல்முனை ஸாஹிராவில் கல்வி கற்ற மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்ராஹிம் ஜிமோஹ்வின் ஹெட்ரிக் கோலால் பெலிகன்ஸை வீழ்த்திய ரினௌன்
இதேவேளை, இன்று காலை நடைபெற்ற 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான 4 x 400 அஞ்சலோட்டத்தில் அம்பாறை மாவட்ட அணி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தது. குறித்த போட்டியை நிறைவுசெய்ய 3 நிமிடங்கள் 32.01 செக்கன்களை அந்த அணி எடுத்துக்கொண்டது. குறித்த போட்டியில் எப். இஹ்ஜாஸ், யூசுப் ரகீப், எம். ரிஸ்வான் மற்றும் ஏ. சம்லி ஆகிய வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.
>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<