தேசிய கடல் அலை சறுக்கல் சம்பியன்ஷிப் தொடர் அறுகம்பையில்

474

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்குப் பிறகு இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் தேசிய கடல் அலை சறுக்கல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை நடத்துவதற்கு இலங்கை கடல் அலை சறுக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும், சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து நடத்தவுள்ள இப்போட்டித் தொடரானது இம்மாதம் 26 ஆம், 27 ஆம் ஆகிய தினங்களில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரபல்யமிக்க அறுகம்பை கடற்கரையில் நடைபெறவுள்ளது.

ஆறு மாதங்களில் புதிய விளையாட்டு சட்டம் – நாமல் ராஜபக்ஷ

அத்துடன், கடந்த காலங்களைப் போன்று இம்முறை போட்டித் தொடரையும் இலங்கையின் சுற்றுலாத் துறையை விளையாட்டின் ஊடாக பிரபல்யப்படுத்தி வருகின்ற முன்னணி நிறுவனங்ளில் ஒன்றான லங்கா ஸ்போர்ட்ஸ்ரைஸன் நிறுவனம் நடத்துகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இம்முறை போட்டிகளானது தேசிய மட்டப் போட்டிகள் மற்றும் திறந்த மட்டப் போட்டிகள் என இரண்டு பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளது. இதில் திறந்த மட்டப் போட்டிகளில் கொவிட் – 19 வைரஸ் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் இலங்கை தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவும், கடல் அலை சறுக்கல் விளையாட்டில் அதீத விருப்பம் கொண்டவராக இருப்பதனால் இனிவரும் காலங்களில் பல சர்வதேசப் போட்டிகளை இலங்கை பூராகவும் நடத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க, தேசிய கடல் அலை சறுக்கல் சம்பியன்ஷிப் தொடர் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் மாநாடு நேற்று (11) விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய விளையாட்டுப் பேரவைக்கு பெருமை சேர்க்கும் சட்டத்தரணி ரோவேனா

இதில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதிலும் குறிப்பாக. எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை விளையாட்டின் ஊடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

குறிப்பாக, உள்ளூர் விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு ஆடைகள் மற்றும் சேவைகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் ஆகியவை இந்த திட்டத்தில் உள்ளடங்கும் என்று அமைச்சர் கூறினார்.

Video – விளையாட்டில் அரசியல் துடைத்தெறியப்படும்..! Namal Rajapaksa

மேலும், கடல் அலை சறுக்கல் விளையாட்டை வியாபிக்கச் செய்வதன் மூலம் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடுவதை ஒரு சுமையாக கருதுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பத்தில் விளையாட்டு வீரர் இருப்பது அந்த குடும்பத்திற்கு மரியாதை மட்டுமல்ல, வருவாயையும் கொண்டு வர வேண்டும். எனவே நாங்கள் தொழில்முறை விளையாட்டு வீரர்களை இலங்கையில் உருவாக்குவோம் என அவர் உறுதியளித்தார்.

Photos: Press Briefing Of Surfing Championship 2020

இலங்கை கடல் அலை சறுக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய கடல் அலை சறுக்கல் சம்பியன்ஷிப் தொடருக்கு மொபிடெல் மற்றும் லின் ஏஷியா ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிரதான அனுசரணையாளர்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<