இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் இன்றைய தினம் (23) நடைபெற்ற இரண்டு போட்டிகளும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டன.
இதில் கண்டி மற்றும் கொழும்பு அணிகள் இடையிலான போட்டி மழை காரணமாக முதல் இன்னிங்ஸ் மாத்திரம் விளையாடப்பட்ட நிலையில் கைவிடப்பட, ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 76 ஓட்டங்களால் தம்புள்ள அணி வெற்றியீட்டியது.
இதில் கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் கண்டி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் குரூஸ்புள்ளே சதமடித்து அசத்தியிருந்தார். இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் பதிவாகிய 5ஆவது சதம் இதுவாகும்.
அதேபோல, ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் தம்புள்ள அணிக்காக சகலதுறையிலும் பிரகாசித்த லஹிரு சமரகோன், துடுப்பாட்டத்தில் அரைச் சதமொன்றையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
தம்புள்ள எதிர் ஜப்னா
தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜப்னா அணியின் பணிப்புரைக்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தம்புள்ள அணிக்கு மினோத் பானுக 15 ஓட்டங்களுடனும், அபிஷேக் லியனாரச்சி 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்
தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தம்புள்ள அணியால் 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை மாத்திரம் எடுக்க முடிந்தது.
தம்புள்ள அணிக்காக பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய லஹிரு சமரகோன், 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 43 பந்துகளில் 66 ஓட்டங்களை அதிகபட்மாக எடுத்தார்.
ஜப்னா அணியின் பந்துவீச்சில் ஜெப்ரி வெண்டர்சே 3 விக்கெட்டுகளையும், ரவிந்து பெர்னாண்டோ மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி, தம்புள்ள அணியின் பந்து வீச்சுக்கு தடுமாற்றத்துடன் முகங்கொடுத்து 13.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது, போட்டியில் மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி சுமார் ஒரு மணித்தியாலம் தாமதமாகி ஆரம்பமாகியது. அந்தவகையில் முழு போட்டிக்குப் பதிலாக டக்வர்த் லூவிஸ் முறைப்படி ஜப்னா அணிக்கு 226 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- லஹிரு உதார, அஹானின் சிறப்பாட்டத்தால் கண்டிக்கு முதல் வெற்றி
- மினோத், அஷேன் சதமடிக்க; அரைச் சதமடித்தார் மொஹமட் சமாஸ்
- சதீரவின் அபார சதத்துடன் ஜப்னா அணிக்கு 2ஆவது வெற்றி
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கினை அடைவதற்கு களமிறங்கிய ஜப்னா அணி, 25 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களை பெற்றிருந்த போது மீண்டும் மழை காரணமாக போட்டி தடைப்பட்டது. போட்டியை தொடர முடியாத நிலையில் டக்வர்த் லுவிஸ் முறையில் முடிவு நிர்ணயிக்கப்பட்டது. இதன்மூலம் போட்டியில் முன்னிலையில் இருந்த தம்புள்ள அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
ஜப்னா அணி சார்பில் அதிகபட்சமாக கசுன் அபேரட்ன 52 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் லஹிரு சமரகோன், ரனித லியனாரச்சி மற்றும் சொனால் தினூஷ ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
இம்முறை தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரில் தம்புள்ள அணி தொடர்ச்சியாக பெற்றுக் கொண்ட 4ஆவது வெற்றியாக இது பதிவாகியதுடன், ஜப்னா அணி முதல் தோல்வியை சந்தித்தது.
கண்டி எதிர் கொழும்பு
கண்டி – பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய கண்டி அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட லசித் குரூஸ்புள்ளே மாத்திரம் நம்பிக்கை கொடுத்த போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணியால் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது.
கண்டி அணிக்காக துடுப்பாட்டத்தில் தனியாளாக அதிரடி காண்பித்த லசித் குரூஸ்புள்ளே, 5 சிக்ஸர்கள் மற்றும் 13 பௌண்டரிகள் அடங்கலாக 133 பந்துகளில் 167 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
கொழும்பு அணியின் பந்துவீச்சில் துஷான் விமுக்தி 3 விக்கெட்டுகளையும், சசித ஜயதிலக மற்றும் தனுஷ்க சந்தருவன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
எவ்வாறாயினும், கொழும்பு அணியின் இன்னிங்ஸானது தொடர்ந்து பெய்த மழையினால் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<