ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் கிழக்கு மாகாண வீரர்களின் வரலாற்று வெற்றியுடன் 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் 2ஆவது நாளுக்கான அனைத்து மெய்வல்லுனர் போட்டிகளும் நிறைவுக்கு வந்தன.
நேற்று (23) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் மற்றும் ஆண்களுக்கான குண்டு எறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் பாஸில் உடையார் மற்றும் மொஹமட் ஆஷிக் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்றனர்.
இந்நிலையில் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாயதலில் தங்கப்பதக்கம் வென்று வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம் மிப்ரான், எதிர்பாராத விதமாக தோல்வியைச் சந்தித்தார்.
அத்துடன் நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டலில் கிழக்கைச் சேர்ந்த வொஷிம் இல்ஹாம் முதலிடத்தைப் பெற்று இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கும், ஆண்களுக்கான 100 மீற்றரில் கலந்துகொண்ட மொஹமட் அஷரப், முதலிடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்கும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
200 மீற்றரில் பாஸிலுக்கு வெள்ளிப்பதக்கம்
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிழக்கு மாகாணம் திருகோணமலையைச் சேர்ந்த மொஹமட் பாஸில் உடையார், போட்டித் தூரத்தை 22.16 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட பாஸில் உடையார், போட்டித் தூரத்தை 22.21 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இறுதிப் போட்டிக்குத் தெரிவான வீரர்களில் சிறந்த காலத்தைப் பதிவு செய்த வீரராகவும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், இம்மாத முற்பகுதியில் தியகமவில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 200 மீற்றரில் கலந்துகொண்ட பாஸில் உடையார் போட்டித் தூரத்தை 21.99 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, போட்டியின் பிறகு எமது இணையத்தளத்துக்கு பாஸில் கருத்து வெளியிடுகையில், ”நான் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாமல் போனது உண்மையில் கவலையளிக்கிறது. போட்டியின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தங்கப்பதக்கத்தை வெற்றிகொள்ள முடியாமல் போனது. எனினும், கடந்த காலங்களில் மேற்கொண்ட பயிற்சிகளின் பிரதிபலனாக அண்மைக்காலமாக நடைபெற்றுவருகின்ற போட்டிகளில் சிறந்த காலத்தை பதிவு செய்ய முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனவே அடுத்த மாதம் முற்பகுதியில் நடைபெறவுள்ள இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பதக்கமொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்” என தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் சார்பாக முதலாவது தங்கப்பதக்கம் வென்ற ஆஷிக்
43ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் …
எனினும், 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள எந்தவொரு வீரர்களது பங்குபற்றலின்றி நடைபெற்ற இறுதிப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த திமுது குமார விஜேரத்ன (22.08 செக்கன்கள்) தங்கப்பதக்கத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த எச். ஏ சமோத் (22.20 செக்கன்கள்) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
குண்டு எறிதலிலும் ஆஷிக் வெற்றி
பரிதி வட்டம் எறிதலைப் போன்று குண்டு எறிதலிலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற கிழக்கு மாகாணம் நிந்தவூரைச் சேர்ந்த Z.T.M ஆஷிக், ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 13.47 மீற்றர் தூரம் எறிந்தார்.
எனினும், கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்ட ஆஷிக், 13.78 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல் நாள் நடைபெற்ற ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் கலந்துகொண்ட ஆஷிக், 42.97 மீற்றர் தூரம் எறிந்து தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்றதுடன், கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை, குண்டு எறிதல் போட்டியில் வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஆர். எஸ். ஜயவர்தன 15.81 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த தனுஷ்க பெரேரா 15.78 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.
தடைதாண்டலில் இல்ஹாமுக்கு முதலிடம்
ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டல் தகுதிகாண் போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாக கலந்துகொண்ட ஆர்.வொஷிம் இல்ஹாம், போட்டித் தூரத்தை 15.23 செக்கன்களில் நிறைவு செய்து இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்குத் தெரிவானார்.
எனினும், அண்மையில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் கலந்துகொண்ட வொஷிம் இல்ஹாம், போட்டித் தூரத்தை 14.57 செக்கன்களில் நிறைவு செய்து இவ்வருடத்துக்கான தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவு செய்தார்.
கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தடை தாண்டலில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக கலந்துகொண்ட வொஷிம் இல்ஹாம், போட்டித் தூரத்தை 14.90 செக்கன்களில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்று தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீளம் பாய்தலில் மிப்ரான், சப்ரின் ஆகியோருக்கு ஏமாற்றம்
யாழ் துரையப்பா மைதானத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று வருடத்தின் சிறந்த வீரர் என்ற விருதைப் பெற்று கிழக்கு மாகாணத்துக்கு பெருமை தேடிக் கொடுத்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம் மிப்ரான், எதிர்பாராத வகையில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தவறான பாய்ச்சலை மேற்கொண்டு அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார்.
இப்போட்டியின் முதல் சுற்றில் 6.60 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 2ஆவது சுற்றுக்குத் தெரிவான மிப்ரான், அதில் கிடைத்த 6 முயற்சியில் நான்கில் மேற்கொண்ட தவறான பாய்ச்சலினால் அவர் குறித்த போட்டியில் 7.04 மீற்றர் தூரத்தை மாத்திரம் பாய்ந்து 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
தேசிய விளையாட்டு விழாவில் 2ஆவது முறையாகவும் அனித்தா தேசிய சாதனை
விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து…
எனினும், இலங்கை இராணுவத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற 95ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் களமிறங்கிய மொஹமட் மிப்ரான், 7.72 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் புற்தரையைக் கொண்ட மாத்தறை கொடவில மைதானத்தில் நீளம் பாய்தல் போட்டியின் போது தொழில்நுட்ப ரீதியாக ஒருசில தடங்கல்களை எதிர்நோக்கிய மிப்ரானுக்கு வெற்றியைப் பதிவுசெய்ய முடியாமல் போனது.
இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.72 மீற்றர் நீளம் பாய்ந்து தேசிய விளையாட்டு விழாவில் தனது முதலாவது தேசிய மட்ட வெற்றியை பதிவு செய்த மிப்ரான், கடந்த வருடம் நடைபெற்ற இலங்கை இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் 7.75 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய போட்டி சாதனையும் நிகழ்த்தினார்.
இதேவேளை, உபாதைகளுக்கு மத்தியில் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட ஏ.எம்.என் சப்ரின் அஹமட், 7.11 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குபற்றியிருந்த சப்ரின் அஹமட், 14.92 மீற்றர் தூரம் பாய்ந்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த பி. விமலசிறி, 7.83 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், மேல் மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களான மதுஷங்க லியனபதிரன, 7.49 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், தனுஷ்க சந்தருவன், 7.37 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.
இந்துனில், கயன்திகாவுக்கு வெற்றி
துர்க்மெனிஸ்தானில் நடைபெற்றுவருகின்ற ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றரில் தங்கமும், ஆண்களுக்கான 800 மீற்றரில் வெள்ளிப்பதக்கமும் வென்று, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை நாடு திரும்பிய நிலையில், குறித்த போட்டித் தொடர்களில் மீண்டும் களமிறங்கிய இருவரும் தங்கப்பதக்கங்களை வென்றனர்.
இதில் ஆண்களுக்கான 800 மீற்றரில் கலந்துகொண்ட ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இந்துனில் ஹேரத், போட்டித் தூரத்தை 1 நிமிடம் 52.42 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
அதேபோன்று பெண்களுக்கான 800 மீற்றரில் கலந்துகொண்ட தென் மாகாணத்தைச் சேர்ந்த கயந்திகா அபேரத்ன, போட்டித் தூரத்தை 2 நிமிடம் 07.47 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப்பதக்கம் வென்றார்.
போட்டிகளின் கடைசி நாளான இன்று 20 மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருடத்தின் அதிவேக வீரரைத் தீர்மானிக்கும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் அஷ்ரப் மற்றும் ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் வொஷிம் இல்ஹாம் ஆகியோர் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவாக விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாள் நிகழ்வுகளும் இதனையடுத்து நடைபெறவுள்ளதுடன், வருடத்தின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, வருடத்தின் சம்பியன் மாகாணம் என்பவற்றுக்கான விருதுகளும் இதன்போது வழங்கிவைக்கப்படவுள்ளன.