தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்

830
National Sports Festival

விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் இன்று (12) காலை பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட கே. சண்முகேஸ்வரன் முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

>> 44ஆவது தேசிய விளையாட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்

இந்த நிலையில், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் கடந்த 2 வருடங்களாக தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்று வந்த வட மாகாணத்தைச் சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன் உபாதை காரணமாக இம்முறை போட்டிகளில் இருந்து விலகியிருந்ததுடன், அவருக்குப் பதிலாக வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்குகொண்ட யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவி சி. ஹெரீனா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

அத்துடன், கிழக்கு மாகாணம் சார்பாக ஆண்களுக்கான தட்டெறிதலில் ஆஷிக் வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மிப்ரான் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொடுத்தனர்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த சரித் கப்புகொட்டுவ, 50.86 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்தினார்.

முன்னதாக, 2014 ஆம் ஆண்டு நிலைநாட்டப்பட்ட (49.69 மீற்றர்) தனது சொந்த சாதனையை அவர் சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு முறியடித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சண்முகேஸ்வரனுக்கு முதல் தங்கம்

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பதக்கங்களை வென்று வருகின்ற ஹட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், முதல் தடவையாக மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் முதலாவது சுவட்டு நிகழ்ச்சியாக ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 30 நிமிடங்களும் 49.99 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது இவ்வருடத்துக்கான அதிசிறந்த நேரப் பதிவாகும்.

இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும், முப்படை மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்த சண்முகேஸ்வரன், இறுதியாக நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் மற்றும் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களிலும் தங்கப் பதக்கத்தை வென்றார்.

>> இளையோர் ஒலிம்பிக் மெய்வல்லுனரில் செனிரு, டிலான் அடுத்த சுற்றுக்குத் தகுதி

அதற்கு முன்னதாக, கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் போட்டித் தொடரில் முதல்  தடவையாக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அவர், ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களான டி.எல் சமரஜீவ (30 நிமி. 57.8 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், ஜி.கே பண்டார (31 நிமி. 22.8 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அனித்தாவின் இடத்தைக் கைப்பற்றிய சச்சினி

வட மாகாணத்துக்கு தேசிய மட்டத்தில் கௌரவத்தைப் பெற்றுக்கொடுக்கின்ற நட்சத்திரமாக கோலூன்றிப் பாய்தலில் வருடந்தோறும் சாதனைகளை படைத்து வருகின்ற அனித்தா ஜெகதீஸ்வரன், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில்  உபாதை காரணமாக பங்குபற்றவில்லை.

கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 3.48 மீற்றர் உயரத்தைத் தாவி தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற அனித்தா, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 3.55 மீற்றர் உயரத்தைத் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த சச்சினி கௌஷல்யா பெரேரா 3.20 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கம் வென்றார்.

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் அனித்தாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்து வருகின்ற அவர், இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி அனித்தாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த கே.எல்.கே கொடிதுவக்கு மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த சி. ஹெரீனா ஆகியோர் 3.00 மீற்றர் உயரத்தைத் தாவி 2 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

மீண்டெழுந்த மிப்ரான்

இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது பதக்கத்தை M.I.M மிப்ரான் பெற்றுக்கொடுத்தார். ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 7.34 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

>> ஆசிய பரா விளையாட்டில் போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்த

அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பின்னடைவை சந்தித்து வந்த மிப்ரான், இறுதியாக நடைபெற்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் மற்றும், ஆசிய விளையாட்டு விழாவுக்கான 2 ஆவது தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி முறையே 7.65, 7.41 மீற்றர் தூரங்களைப் பாய்ந்து 6 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், கடந்த வருடம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட மிப்ரான், யாழ் துரையப்பா மைதானத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்று வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.

இது இவ்வாறிருக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஜானக பிரசாத் விமலசிறி, 7.81 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த அமில ஜயசிறி 7.56 மீற்றர் தூரம் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்.

ஹெட்ரிக் வாய்ப்பை தவறவிட்ட ஆஷிக்

ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு நட்சத்திர வீரரான Z.T.M ஆஷிக் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். போட்டியில் அவர் 44.66 மீற்றர் தூரத்திற்கு தமது திறமையை வெளிப்படுத்தினார்.

எனினும், கடந்த 2 வருடங்களாக குறித்த போட்டிப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று வந்த ஆஷிக், ஹெட்ரிக் தங்கத்தைப் பெறும் வாய்ப்பை இம்முறை தவறவிட்டார்.

எனினும், இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றியிருந்த அவர், 45.21 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை >குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த மாகாணத்தைச் சேர்ந்த சரித் கப்புகொட்டுவ, (51.22 மீற்றர்) பெற்றுக்கொண்டதுடன், இன்று நடைபெற்ற மைதான நிகழ்ச்சிகளில் இவர் பெற்றுக்கொண்ட 2 ஆவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

>> சமநிலையில் நிறைவுற்ற ஸாஹிரா – மகாஜனா இடையிலான விறுவிறுப்பான மோதல்

இதேநேரம், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சுனந்த நிரோஷன 41.66 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

சபானுக்கு முதல் வெற்றி

கனிஷ்ட மெய்வல்லுனர் அரங்கில் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனான வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் சபான், முதல் தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று அசத்தினார்.

இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டி தூரத்தை 21.60 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

கடந்த ஜுலை மாதம் நடைபெற்ற 96 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றரில் முதல் தடவையாக களமிறங்கியிருந்த சபான், தேசிய மட்டத்தில் முன்னிலையிலுள்ள வீரர்களையெல்லாம் பின்தள்ளி தங்கப் பதக்கத்தினை வென்றதுடன், முதல் தடவையாக தேசிய மெய்வல்லுனர் குழாமிலும் இடம்பிடித்தார்.

இதேநேரம், குறித்த போட்டியை 21.33 செக்கன்களில் நிறைவு செய்த தென் மாகாணத்தைச் சேர்ந்த வினோஜ் சுரன்ஜய, தங்கப் பதக்கத்தையும், 21.83 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த தென் மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமாரு வீரரான எஸ்.எல் விக்ரமசிங்க வெண்கலப் பதக்கத்தினையும் தனதாக்கினர்.

இதேவேளை, குறித்த போட்டியில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பாஸில் உடையார், போட்டி தூரத்தை 22.13 செக்கன்களில் நிறைவு செய்து ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<