கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக மஹேல – சங்காவின் ஒத்துழைப்பு

308

மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (11) இடம்பெற்றது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர் ரவீன் விக்ரமரட்ன மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் குறிப்பாக, இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்தல், பாடசாலை மட்டத்திலான கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லல் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக்கில் இலங்கை வீரர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

>> கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர T10 போட்டிகள் வழிவகுக்கும்

இதனிடையே, 2021ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து வயதுப் பிரிவுகளிலும் உள்ள வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை தான் நம்புவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினருமான குமார் சங்கக்காரவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

தேசிய விளையாட்டுப் பேரவை நியமிக்கப்பட்ட பிறகு இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<