அகில இலங்கை பாடசாலை மட்ட வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகளில் கொலன்னாவை மகளிர் வித்தியாலயத்தை வீழ்த்தி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி பாடசாலை வலைப்பந்தாட்ட வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.
கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் 360 பாடசாலைகள் பங்கேற்றுள்ள 2017ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று பதுளை, விச்சென்ட் டயஸ் மைதானத்தில் ஆரம்பமாகின.
இதன் முதல் சுற்றின் ஆட்டமொன்றில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியும், கொலன்னாவை மகளிர் வித்தியாலய அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் ஆரம்பம் முதலே அபார விளையாட்டை வெளிப்படுத்திய யாழ். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணியினர், 28-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியது.
யாழ் மாவட்ட பாடசாலையான இக்கல்லூரியின் வலைப்பந்து அணி தேசிய மட்டப் போட்டிகளில் இதுவரையில் எந்தவொரு வெற்றியையும் பெற்றதில்லை. இவ்வாறான ஒரு நிலையில் இவ்வணி பெற்றுள்ள இந்த முதல் வெற்றியானது கல்லூரிக்கு சரித்திர வெற்றியாகவும் உள்ளது.
அகில இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நெஸ்ட்லே லங்கா லிமிட்டெடின் மைலோ 26ஆவது வருடமாக அனுசரணை வழங்குகின்ற அகில இலங்கை பாடசாலை வலைப்பந்தாட்ட போட்டித் தொடரில் 13 வயதுக்குட்பட்ட பிரிவில் 90 அணிகளும், 15, 17 மற்றும் 19 ஆகிய வயதுக்குட்பட்ட ஏ பிரிவில் தலா 60 பாடசாலை அணிகளும், பி பிரிவில் தலா 30 பாடசாலை அணிகளும் நேற்று ஆரம்பமாகிய இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.