டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற இலங்கை அணிக்கு அனுசரணை வழங்குவதற்கு தம்மால் முடியும் எனவும், அதற்காக இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் தேசிய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் தேசிய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஒலிம்பிக் சங்கத்துக்கு அவ்வாறானதொரு அவசர நிலைமையோ அல்லது நிதி நெருக்கடியோ ஏற்படுமாயின் சர்வதேச ஒலிம்பிக் சங்கம், விளையாட்டுத்துறை அமைச்சு அல்லது தனியார் நிறுவனங்களின் ஊடாக நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
>> டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்கேற்பு?
அதேபோல, இலங்கை கிரிக்கெட் சபை விரும்பினால் இலங்கையில் உள்ள ஏனைய விளையாட்டு சங்கங்களுக்கு அந்த நிதியை வழங்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி இதுதொடர்பில் சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றும் இலங்கை அணி வீரர்களுக்கு அனுசரணை வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “உண்மையில் இது விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுகோளாகும். அதேபோல, நாங்கள் இதற்கு முன்னரும் இதுபோன்று நிதி உதவிகளை வழங்கியுள்ளோம். இது எமக்கு புதிய விடயமல்ல. 2018 தேசிய விளையாட்டு விழாவின் அதிசிறந்த வீரருக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் மோட்டார் கார் பரிசாக வழங்கப்பட்டது.
எனினும், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுகின்ற இலங்கை அணிக்கு 35 அல்லது 40 மில்லியன்களை இலங்கை கிரிக்கெட் சபைக்கு வழங்கவேண்டி ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
>> ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள முதலாவது திருநங்கை
எதுஎவ்வாறாயினும், எமது அண்டை நாடும், உலகின் முன்னணி கிரிக்கெட் அணியுமான இந்திய கிரிக்கெட் சபை, அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்துக்கு 10 கோடி ரூபா நிதி உதவி அளித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீர வீராங்கனைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்திய கிரிக்கெட் சபை இந்த நிதி உதவியை வழங்கியுள்ளது.
இதில் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று இந்த நிதி உதவி அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<