தேசிய கபடியில் அம்பாறை, கிளிநொச்சி அணிகள் சம்பியன்

தேசிய கபடி சம்பியன்ஷிப் – 2022

482

தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்ட அணியும் சம்பியன்களாகத் தெரிவாகின.

இலங்கை கபடி சம்மேளனம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்த மாவட்ட ரீதியிலான தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடர் கடந்த 8ஆம் திகதி கொழும்பு-07 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இம்முறை போட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் இருந்து ஆண்கள் பிரிவில் 25 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 மாவட்ட அணிகளும் பங்குபற்றின.

ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டி

இம்முறை தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பில் களமிறங்கிய நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகமும், மட்டக்களப்பு மாவட்ட அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இரண்டு அணிகளுமே வலிமை வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக அமைந்தது.

இலங்கை கபடியின் நட்சத்திர வீரர் அஸ்லம் சஜா, அம்பாறை மாவட்ட அணிக்கு முதல் புள்ளியை எடுத்தார். மறுபுறத்தில் மட்டக்களப்பு மாவட்ட அணி பதிலடியாக விளையாடியதால் இரு அணிகளும் சம அளவில் புள்ளிகளை எடுத்து வந்தாலும், போட்டியின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அம்பாறை மாவட்ட அணி 25-13 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

தேசிய கபடி சம்பியன்ஷிப் தொடர் இன்று ஆரம்பம்

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அம்பாறை மாவட்ட அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அம்பாறை மாவட்ட அணி 31 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள, மட்டக்களப்பு மாவட்ட அணியால் 7 புள்ளிகளை மாத்திரமே இப்பாதியில் பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன்படி, ஆட்டநேர முடிவில் 56-20 என்ற புள்ளிகள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணியை வீழ்த்தி முதல் முறையாக தேசிய கபடி சம்பியன்ஷிப் பட்டத்தை அம்பாறை மாவட்ட அணி சுவீகரித்தது.

தேசிய மட்ட கபடி போட்டிகளில் முன்னணி அணியாக வலம்வருகின்ற அம்பாறை மதீனா விளையாட்டு கழகம், இறுதியாக நடைபெற்ற 33ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய மட்ட கபடி போட்டியில் சம்பியனாகத் தெரிவாகியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

பெண்கள் பிரிவு இறுதிப்போட்டி

இன்று (10) மாலை நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம அளவில் திறமையை வெளிப்படுத்தியிருந்தாலும், யாழ்ப்பாண அணி 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் சம அளவில் புள்ளிகளை எடுத்தன. இதில் ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண அணி 29 புள்ளிகளையும், கிளிநொச்சி அணி 28 புள்ளிகளையும் எடுக்க போட்டி மேலும் விறுவிறுப்பாக மாறியது.

எனினும், போட்டியின் கடைசி 5 நிமிடங்களில் கிளிநொச்சி வீராங்கனைகள் தமது நுட்பமான ஆட்டத்தை வெளிப்படுத்த புள்ளிகள் மெல்ல மெல்ல அதிகரித்தது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கிளிநொச்சி வீராங்கனைகள் விறுவிறுப்புடன் ஆடி யாழ்ப்பாண அணி நெருங்காத அளவுக்கு 10 புள்ளிகள் வித்தியாசத்தை கொண்டு வந்தனர்.

இலங்கை கபடி அணியின் பயிற்சியாளரானார் பாஸ்கரன்

இதனால், ஆட்டநேர முடிவில் கிளிநொச்சி அணி 49 புள்ளிகளையும், யாழ்ப்பாண அணி 40 புள்ளிளைகளையும் எடுத்தன. இதனையடுத்து 49–40 என்ற புள்ளிகள் கணக்கில் கிளிநொச்சி அணி வெற்றி வாகை சூடியது.

இறுதிப்போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்ற இரண்டு அணிகளுக்கும், வெற்றிக் கிண்ணத்துடன் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட, 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அணிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டன.

இது இவ்வாறிருக்க, ஆண்கள் பிரிவில் மூன்றாவது இடத்தை அநுராதபுர மாவட்ட அணியும், பெண்கள் பிரிவில் மூன்றாவது இடத்தை மட்டக்களப்பு மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, இறுதிப்போட்டியின் சிறந்த வீரருக்கான விருதை அம்பாறை மதீனா விளையாட்டுக் கழகத்தின் நட்சத்திர வீரர் அஸ்லம் சஜா பெற்றுக்கொள்ள, பெண்கள் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான விருதை கிளிநொச்சி மாவட்ட அணியைச் சேர்ந்த பி. தனூஷா பெற்றுக்கொண்டார்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<