கொவிட் 19 எனப்படும் கொரோனா என்ற ஒற்றை வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் உயிரிழப்புகளையும் பெரும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எனினும், கொவிட் – 19 வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், உலகம் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் இயங்கத் தொடங்கியிருக்கிறது. கொரோனாவுக்குப் பிறகான உலகம் என்பது வேறு மாதிரியாக இருக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
வேறு திகதியில் லங்கா ப்ரீமியர் லீக் வீரர்கள் ஏலம்
ஆனால், இந்தச் சவால்களைச் சமாளிக்க அனைத்துத் துறைகளிலும் பல அதிரடியான முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதிலும் குறிப்பாக, கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டுத் துறையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் முதல் ஒலிம்பிக் வரை விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டுள்ள இந்தக் கொடிய வைரஸின் தாக்கத்தில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டது. இதனால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு அமுல் கடந்த மே மாதத்தில் இருந்து தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் காரணமாக தடைப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை ஜுன் மாதம் முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்க இலங்கை அரசாங்கமும், சுகாதார அமைச்சும் அனுமதி வழங்கியது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தமது பயிற்சிகளை ஆரம்பித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து உள்ளூர் கழக மட்டப் போட்டிகள் நடைபெற்றன.
மறுபுறத்தில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனமும் முன்னணி கழகங்கள் பங்கேற்ற FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி முடித்தது.
Video – விஜய் சேதுபதி முரளியாக மாறுவது உறுதி
மறுபுறத்தில் இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகள், 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவுக்கான மாவட்ட மட்டப் போட்டிகள், தேசிய கடல் அலை சறுக்கல் போட்டித் தொடர், தேசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், டயலொக் தங்கக் கிண்ண கரப்பந்தாட்டத் தொடர், தேசிய பெட்மிண்டன் தொடர், தேசிய குறிபார்த்து சுடுதல் சம்பியன்ஷிப் தொடர் என பல முக்கிய போட்டித் தொடர்கள் கடந்த 2 மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றன.
மீண்டும் தலைதூக்கிய கொரோனா
இலங்கையின் முன்னணி தொழிற்சாலையில் ஒன்றான பிரென்டிக்ஸ் நிறுவனத்தின் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையை மையப்படுத்திய கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து, நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்திருக்கிறது.
குறித்த தொழிற்சாலையில் பணியாற்றி திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் இதன் தாக்கம் வேகமாகப் பரவியது.
எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மீள் அறிவிப்பு வரையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
கொவிட் அச்சத்தினால் மேஜர் எமர்ஜிங் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு
இதனிடையே, நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களை ஒன்று கூட்டும் நடவடிகைகளை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, கடந்த ஜுன் மாதம் முதல் அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வந்த பல உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
கிரிக்கெட்
கொவிட்-19 வைரஸ் அச்சம் நாட்டில் மீண்டும் தலை தூக்கியிருக்கும் நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் சபையினால் 23 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்காக நடாத்தி வந்த கழக அணிகளின் மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடர் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இளம் வயது வீரர்களின் திறமைகளை வெளிக்காட்ட மிகப் பெரிய வாய்ப்பு மேடை ஒன்றை உருவாக்கி கொடுத்த இந்த மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குழுநிலை லீக் ஆட்டங்கள் யாவும் கடந்த வார இறுதியில் நிறைவுக்கு வந்தன.
அந்தவகையில், இந்த மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் ஒக்டோபர் 07ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலையே, கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடரை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.
மறுபுறத்தில் இலங்கை கிரிக்கெட் சபை இம்மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடாத்தவிருந்த நான்கு அணிகள் பங்குபெறும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தது.
குறித்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணிகளுக்கு குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தசுன் ஷானக்க தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஒத்திவைக்கப்படும் அடுத்த கிரிக்கெட் தொடர்
இதுஇவ்வாறிருக்க, இலங்கை அரசாங்கத்தின் கொவிட் – 19 விதிமுறைகள் மற்றும் சுய தனிமைப்படுத்தல் வழிமுறைகள் காரணமாக நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் டி20 தொடர் மற்றும் அதற்கான வீரர்கள் ஏலம் என்பவற்றையும் ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் அறிவித்தது.
இதன்படி, நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் டி20 தொடரானது நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விளையாட்டு விழா
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக இம்மாதம் 10ஆம், 11ஆம் திகதி கதிர்காமத்தில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு விழாவின் மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகள் என்பன காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க, இவ்வருட இறுதியில் நடைபெறவிருந்த 46ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சிகளும் பிற்போடப்படுவதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மாவட்ட ரீதியில் தற்போது நடைபெற்று வந்த 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவுக்கான போட்டிகளையும் ஒத்திவைப்பதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அறிவித்துள்ளது.
மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள்
கொவிட் – 19 வைரஸ் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த பெரும்பாலான உள்ளூர் மற்றும் சர்வதேசப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே, சுகாதார அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளை இம்மாதம் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
கொரோனாவினால் தேசிய விளையாட்டு விழா மீண்டும் ஒத்திவைப்பு
இந்த நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் தலைதூக்கியுள்ளதால் குறித்த தகுதிகாண் போட்டிகளையும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தினத்தில் சுப்பர் மற்றும் தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு மாத்திரம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி 8 போட்டி நிகழ்ச்சிகளுக்கான நேரத்தைக் கணிப்பிடுகின்ற போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
இதுஇவ்வாறிருக்க, தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரும் நடைபெறுவது சந்தேகம் என இலங்கை மெய்வல்லுனர் சம்மேளன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வலைப்பந்தாட்டம்
சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு தேசிய அணி வீராங்கனைகளுக்கான பயிற்சிகளை இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனம் அண்மையில் ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக குறித்த பயிற்சி முகாமையும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, அடுத்த வாரம் பதுளை மற்றும் மொனராகலையில் நடைபெறவிருந்த வலைப்பந்தாட்ட பயிற்சியாளர்களுக்கான கருத்தரங்கும் ரத்து செய்யப்படுவதாக அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கொரோனாவினால் தள்ளிப்போகும் பாடசாலை விளையாட்டு நிகழ்ச்சிகள்
றக்பி
நாட்டில் நிலவிய கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்தவொரு றக்பி போட்டிகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில், இம்மாதம் 30ஆம், 31ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த கழகங்களுக்கிடையிலான எழுவர் றக்பி தொடரை ஒத்திவைப்பதாக இலங்கை றக்பி சம்மேளனம் அறிவித்துள்ளது.
கராத்தே
ஒக்டோபர் 10ஆம், 11ஆம் திகதிகளில் பண்டாரகமவில் நடைபெறவிருந்த தேசிய கராத்தே சம்பியன்ஷிப் தொடரை ஒத்திவைப்பதாக இலங்கை கராத்தே சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன், அதே தினத்தில் நடைபெறவிருந்த தேசிய கராத்தே நடுவர்களுக்கான செய்முறை பயிற்சியும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அடுத்த மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தேசிய கனிஷ்ட கராத்தே சம்பியன்ஷிப் தொடரையும் காலவரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை கராத்தே சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எதுஎவ்வாறாயினும், தேசிய விளையாட்டு மருத்துவ ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தெரிவு செய்யப்பட்ட வீரர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக, சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தனிப்பட்ட முறையில் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<