தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான விண்ணப்பம் கோரல்

99th National Athletics Championship - 2021

296

நாட்டில் கொவிட் – 19 வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது. 

இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான புதிய திகதி அறிவிப்பு

ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெறுவதற்கான இறுதி தகுதிகாண் போட்டியாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளமை சிறப்பம்சமாகும்

இதுஇவ்வாறிருக்க, தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்ற விரும்புகின்ற வீரர்கள் எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது

இதனிடையே, உலக கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியாக நடைபெறவுள்ள தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளும் திட்டமிட்டபடி எதிர்வரும் ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் பங்குபற்ற விரும்புகின்ற வீரர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதிக்கு முன் அனுப்பிவைக்க வேண்டும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைப்பு

இதேநேரம், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் கனிஷ் மெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடத்துவதற்கும் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்ற புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து நீடித்தால் மேலே குறிப்பிட்ட இரண்டு போட்டிகளையும் சுகாதார வழிகாட்டலின் கீழ் நடத்துவதற்கான திட்டங்களையும் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் முன்னெடுத்துள்ளது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<