கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீரர் புவிதரனுக்கு முதலிடம்

National Athletics Trials - 2021

744

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்தின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் நேற்று (09) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

நேற்று நடைபெற்ற போட்டிகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் சபானும், ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றரில் மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷனும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சப்ரின் அஹமட்டும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனவே இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிகளைப் பதிவுசெய்த தமிழ் பேசுகின்ற வீரர்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்

புவிதரனுக்கு முதலிடம்

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த . புவிதரன் 4.90 மீற்றர் உயரத்தைத் தாவி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு முதல்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் பங்குகொண்ட புவிதரன், கோலூன்றிப் பாய்தலில் தனது அதிசிறந்த உயரத்தையும் பதிவுசெய்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற இவர், இறுதியாக கடந்த 2019 செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தினை வென்றார்

>> ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்த புவிதரன், டக்சிதா, தீபிகா

அதன்பிறகு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.82 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

எது எவ்வாறாயினும், கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்காக புவிதரன் தெரிவாகியிருந்த போதிலும், நாட்டில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா வைரஸ் அச்சறுத்தல் காரணமாக அவரால் கொழும்புக்கு வர முடியாமல் போனது. இதனால் குறித்த போட்டியில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை தவறவிட்டார்

சபானுக்கு மற்றுமொரு வெற்றி

இலங்கையின் இளம் குறுந்தூர ஓட்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற மொஹமட் சபான், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். 

குறித்த போட்டியை 20.81 செக்கன்களில் ஓடிமுடித்த சபான், 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அதிவேகமான காலத்தைப் பதிவுசெய்த நான்காவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார்.

>> மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் சபான், சபியாவுக்கு வெற்றி

முன்னதாக, வினோஜ் சுரன்ஜய (20.88 செக்.), சுகத் திலகரட்ன (20.69 செக்.), பிரசன்ன அமரசேகர (20.80 செக்.) ஆகிய மூவரும் 200 மீற்றரில் அதிவேகமான காலங்களைப் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, போட்டிகளில் முதல்நாளன்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் சபான் மூன்றாமிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வக்னுக்கு இரண்டாவது வெற்றி

ஆண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட விக்னராஜ் வக்ன் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியை அவர் 14 நிமிடங்கள் 51.59 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

முன்னதாக, புதன்கிழமை (7) நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> தேசிய தகுதிகாண் மெய்வல்லுனரில் தங்கம் வென்றார் சண்முகேஸ்வரன்

இதனிடையே, ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட குமார் சண்முகேஸ்வரனுக்கு, 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது

முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு இரண்டாமிடம்

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருகின்ற சப்ரின் அஹமட், இம்முறை தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண்  போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 15.87 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார்

இறுதியாக கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் சப்ரின் அஹமட் நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அடைந்தார்.

ஆனந்தனுக்கு முதல் வெற்றி

கனிஷ் பிரிவில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் கஜன் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். போட்டியில் அவர் 57.94 மீற்றர் தூரத்தை எறிந்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடியுள்ள கஜன், தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியொன்றில் முதல்தடவையாக வெற்றியினைப் பதிவுசெய்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<