இவ்வருடம் நடைபெறவுள்ள 98 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை தெரிவு செய்யப்பட்ட வீரர்களை மாத்திரம் இணைத்துக் கொண்டு நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் மெல்ல மெல்ல குறைவடையத் தொடங்கியதன் காரணமாக இலங்கை அரசாங்கம் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் கிரிக்கெட், கால்பந்து, றக்பி மற்றும் மெய்வல்லுனர் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.
இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்திற்கு புதிய பெயர்
இதன்படி. மூன்று மாதகால இடைவெளியின் பிறகு இலங்கை மெய்வல்லுனர் அணி வீரர்களும். கடந்த 22 ஆம் திகதி முதல் பயிற்சிகளை கொழும்பில் உள்ள டொரின்டன் மைதானத்தில் ஆரம்பித்தனர்.
இந்த பயிற்சி முகாமில் கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களை உள்ளடக்கியதாக 50 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸுக்குப் பிறகு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்ட மெய்வல்லுனர் தொடர்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.
இதில் இவ்வருடம் நடைபெறவுள்ள தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரை நாட்டில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பிறகு நிலைமைகளை ஆராய்ந்து பார்த்து நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக வை.கே குலரத்ன பரிந்துரை
இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் கொழும்பு சுகததாஸ அரங்கில் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரை நடத்துவதற்காக மூன்று தினங்களை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் ஒதுக்கியுள்ளது.
குறிப்பாக, இவ்வருட இறுதியில் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 2021 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள வீரர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டி அட்டவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 2021 ஜுன் மாதம் 29 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைக் கருத்திற்கொண்டு 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்தவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடு அறிவிப்பு
அத்துடன், தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் வீரர்களை உள்வாங்குவதை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விசேட தெரிவுப் போட்டிகளை நடத்தவதற்கும் இந்தக் கூட்டத்தின் போது அனுமதி கிடைத்துள்ளது.
இதனிடையே, அடுத்த வருடம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் அணி தற்போது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற 27 வீரர்களை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மெய்வல்லுனர் குழாத்தில் பெண்களுக்கான 800 மீற்றர் தேசிய சம்பியனான நிமாலி லியனாரச்சி மற்றும் பெண்களுக்கான முப்பாய்ச்சல் தேசிய சம்பியனான விதூஷா லக்ஷானியும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2022க்கு ஒத்திவைப்பு
இதன்படி, மெய்வல்லுனர் வீரர்களுக்கான வதிவிட பயிற்சி முகாம், ஜுலை மாதம் 4 ஆம் திகதி முதல் நுவரெலியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் எதிர்வரும் 2022 இல் இடம்பெறவுள்ளது.
இதனையொட்டி சர்வதேச அழைப்பு மெய்வல்லுனர் தொடரொன்றை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஆசியாவின் இரண்டாவது பழமையான தேசிய மெய்வல்லுனர் சங்கமான இலங்கை மெய்வல்லுனர் சங்கம் 1922 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் முதலாவது தலைவராக பிரித்தானியாவைச் சேர்ந்த கர்னல் டி.வை வைட் செயற்பட்டிருந்தார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<