இந்த ஆண்டின் இறுதிப் பகுதி மற்றும் அடுத்த ஆண்டு முழுவதும் இலங்கையில் நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ள நாட்காட்டியின் பிரகாரம் இம்மாதம் நடைபெறவுள்ள ஜோன் டார்பட் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சம்பியன்ஷிப் தொடர்கள் தெரிவுப் போட்டிகளாக கருதப்படும். அது நிறைவடைந்த பின்னர் செப்டம்பர் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தேசிய மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிகள் தியகமவில் நடைபெறும்.
இதனையடுத்து தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மெய்வல்லுனர் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த போட்டிகளுடன் இந்த ஆண்டுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் அனைத்தும் நிறைவடையும்.
இந்த நிலையில் 2023 ஆண்டை ஆரம்பிக்கும் வகையில் பெப்ரவரி மாதம் தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களின் திறமைகளை பரிசீலிக்கின்ற விசேட மெய்வல்லுனர் போட்டியும், மார்ச் மாதம் கனிஷ்ட மற்றும் இளையோர்களுக்கான தெரிவுப் போட்டிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- விசேட மெய்வல்லுனர் தெரிவுப் போட்டிக்கான திகதி அறிவிப்பு
- சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் தொடருக்கு Ritzbury அனுசரணை
- டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் யுபுன்
மெய்வல்லுனர் போட்டிகளின் முதன்மை போட்டித் தொடராக விளங்குகின்ற 101ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகள் மார்ச் 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2023இல் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா, ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் அஞ்சலோட்ட அணிகளுக்கு வீரர்களை உள்வாங்குவதற்கான தெரிவுப் போட்டியாக அது அமையவுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு மீண்டும் அஞ்சலோட்ட திருவிழா மற்றும் இலங்கை GrandPrix மெய்வல்லுனர் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதேவேளை, இலங்கை மெய்வல்லுனர் போட்டிகளின் திட்டங்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (06) CR&FC வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தடகள சம்மேளனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், எதிர்கால மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்பில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் பாலித பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,
“எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய, இளையோர் மற்றும் கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர்களை இலக்காகக் கொண்டு தான் மெய்வல்லுனர் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்த தேவையான பணிகளை செய்து வருகிறோம்.
குறிப்பாக ஆசிய கனிஷ்ட மற்றும் ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் இம்மாதம் விசேட தகுதிகாண் போட்டிகளை நடத்தவுள்ளோம். மேலும், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் ஏழு பதக்கங்களையும், ஆசிய இளையோர் போட்டியில் ஐந்து பதக்கங்களையும் வெற்றி கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
மேலும், தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெறுகின்ற வீரர்களுக்கு சர்வதேச மெய்வல்லுனர் போட்டி வாய்ப்புக்களை வழங்கவும், தரவரிசை மூலம் உலக சம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறவும் திட்டங்களை தயாரித்துள்ளோம்” என தெரிவித்தார்.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<