தெற்காசியாவின் அதிவேக மனிதராக மாறிய ஹிமாஷ ஏஷான்

209

இந்த ஆண்டுக்கான ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான வீர, வீராங்கனைகளை தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட முதல்கட்ட தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் மற்றும் இறுதி நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (24) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்திருக்கின்றது.  

ஆசிய தகுதிகாண் போட்டியில் சண்முகேஸ்வரன் மற்றும் சப்ரினுக்கு வெற்றி

ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சம்பியனாக ……..

இந்த தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றினை 10.22 செக்கன்களில் நிறைவு செய்த இராணுவப்படையின் ஹிமாஷ ஏஷான் புதிய தேசிய சாதனையோடு, தெற்காசியாவில் மிகவும் குறுகிய நேரத்திற்குள் 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை நிறைவு செய்த வீரராக தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

முன்னதாக, இந்த தகுதிகாண் போட்டிகளின் முதல் நாளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை இரண்டு தடவைகள் நிறைவு செய்த ஏஷான் அதற்காக முறையே 10.11 செக்கன்கள் மற்றும் 10.12 செக்கன்கள் எடுத்து ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தெரிவாகியிருந்தார். எனினும், முதல் நாளில் காற்றின் வேகத்திசைகாட்டியின் வாசிப்பு அனுமதிக்கப்பட்ட அளவினை விட அதிகமாக இருந்த காரணத்தினால் ஏஷானின் முதல் நாள் பதிவுகள் தேசிய சாதனையாக கருதப்பட்டிருக்கவில்லை.

அதேவேளை, தகுதிகாண் போட்டிகளின் முதல் நாளில் பெண்களுக்கான 100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியை 12.06 செக்கன்களில் நிறைவு செய்த ஷெலின்டா ஜான்சன், இரண்டாம் நாளில் குறித்த 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.93 செக்கன்களில் நிறைவு செய்து முன்னேற்றமான பெறுபேறு ஒன்றினை காட்டியிருக்கின்றார்.  

Embed – https://www.thepapare.com/asian-trials-2019-day-01-tamil-roundup/

கொழும்பு கேட்வே கல்லூரி மாணவியான ஷெலின்டா ஜான்சனின் இந்த பெறுபேறுகள் இலங்கைக்காக எதிர்காலத்தில் அவர் சிறந்த தடகள வீராங்கனையாக வருவார் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

அதேநேரம், ஷெலின்டா ஜான்சன் 200 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான இறுதிச் சுற்றினை 24.71 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தை பெற்ற போதிலும், முதல் நாளில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியினை 24.41 செக்கன்கள் என்கிற  நேரப்பதிவுடன் நிறைவு செய்து சிறப்பான பதிவை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷெலின்டா ஜான்சன் போன்று ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை முதல் நாளில் 21.10 செக்கன்கள் என்கிற நேரப்பதிவுடன் நிறைவு செய்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருந்த வினோஜ் சுரன்ஜய, இந்த தகுதிகாண் போட்டிகளின் இரண்டாம் நாளில் 200 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றில் முதலாம் இடத்தினை பெற்ற போதிலும் இம்முறை அதற்காக 21.39 செக்கன்களை எடுத்திருந்தார்.

அதேநேரம் இராணுவப்படை வீரர் மொஹமட் சபான்  200 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றினை 21.86 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தினைப் பெற, ஷெஹான் அம்பேபிட்டிய 21.91 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார்.

Photo Album : Senior National Trial 2019

கடும் போட்டி நிலவியிருந்த ஆண்களுக்கான நீளம் பாய்தலில், ப்ரஸ்பாத் விமலசிரி தேசிய சாதனையுடன் 8.07 நீளம் தாண்டி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதுடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான நீளம் பாய்தல் அடைவுமட்டமான 7.90 மீற்றர் நீளத்தையும் தாண்டி தனது வாய்ப்பை உறுதி செய்து கொண்டார்.

நீளம் பாய்தல் இறுதிச் சுற்றில் தனுஷ்க சந்தருவன் 7.89 மீற்றர் தாண்டி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். சந்தருவன் அடைவுமட்ட நீளத்தை விட ஒரு சிறிய இடைவெளி வித்தியாசத்திலேயே காணப்படுவதால் அவருக்கும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிச் சுற்றினை 02:02.83 நிமிடங்களில் நிறைவு செய்த  இலங்கை விமானப்படை வீராங்கனை நிமாலி லியனஆராச்சி முதலிடத்தை பெற்றுக் கொண்டார். எனினும், 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் நிமாலியின் சொந்த சாதனையாக 02.02.53 நிமிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இரண்டாம், மூன்றாம் இடங்களை முறையே பெற்றுக்கொண்ட கயந்திக்கா அபேயரத்ன (02:03.36) மற்றும்  தில்ஷி குமாரசிங்க (02:04.23) ஆகியோரும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவுமட்ட நேரமான 02:04.5 நிமிடங்களை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட அடைவுமட்டமான 1:48.00 நிமிடங்கள் எந்த வீரர்களினாலும் எட்டப்படவில்லை. இதன்படி, ஆண்களுக்கான 800 மீற்றர் இறுதி சுற்றில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட இளம் வீரரான GR. சத்துரங்க 800 மீற்றர் ஓட்டப் போட்டியினை நிறைவு செய்ய 1:50.47 செக்கன்கள் எடுத்திருந்தார். இதேநேரம் இதில் SK. வெடகெதர (1:51.47 நிமி) மற்றும் சுசந்த குமார (1:51.17) ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவு செய்யப்படும் வீர, வீராங்கனைகள் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் கொழும்பில் வைத்து  தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு, திறமைகளை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.