தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான புதிய திகதி அறிவிப்பு

228

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வருடம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெறுவதற்கான இறுதி தகுதிகாண் போட்டியாக நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் தீர்மானித்துள்ளது. 

இதன்படி, இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடத்துவதற்கு மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.  

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்திவைப்பு

முன்னதாக, 24ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சீனாவில் நடைபெறும் எனவும், இதற்கான தகுதிகாண் போட்டிகளை ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி முதல் நடத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டது.  

எனினும், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தொடரை ஒத்திவைப்பதாக சீனா ஒலிம்பிக் சங்கமும், ஆசிய ஒலிம்பிக் பேரவையும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பானது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்த இலங்கை மெய்வல்லுனர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதுஇவ்வாறிருக்க, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கவுள்ள மெய்வல்லுனர்களுக்கு தகுதிபெறுவதற்கு ஜுன் மாதம் 29ஆம் திகதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு

இதனிடையே, இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்ற எந்தவொரு இலங்கை வீரரும் முன்மொழியப்படவில்லை. எனினும், உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் வெளியிடப்படுகின்ற தகுதிகாண் பட்டியலில் ஒலிம்பிக் விழாவுக்கு விண்ணப்பிக்க தவறுகின்ற வீரர்களுக்காக விசேட புள்ளிகள் முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு முதல்தடவையாக வழங்குகின்ற ஒரு புதிய திட்டமாகும்.  

எனவே, குறித்த புள்ளிகள் முறையின் படி இலங்கையைச் சேர்ந்த மூன்று மெய்வல்லுனர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கின்ற அரிய வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் பெண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் தேசிய சம்பியனான நிலானி ரத்னாயக்க, ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் தேசிய சம்பியனான நதீhஷா ராமநாயக்க ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<