ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறும் முன்னணி சுழல் வீரர்

261

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான நதன் லயன் தசை உபாதை காரணமாக ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நதன் லயன் ஆஷஸ் தொடரில் எஞ்சியிருக்கும் மூன்று போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றார்.

35 வயது நிரம்பிய நதன் லயன் லோர்ட்ல் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்ட போது உபாதைக்குள்ளானது அவதானிக்கப்பட்டிருந்தது. இந்த உபாதையின் பின்னர் மைதானத்தினை விட்டு வெளியேறிய அவர் அதன் பின்னர் பந்துவீசவும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் துடுப்பாட அழைக்கப்பட்ட அவர் அதன் மூலம் 15 ஓட்டங்களையும் தனது தரப்பிற்காக பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 43 ஓட்டங்களால் வீழ்த்தியதோடு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரிலும் 2-0 என முன்னிலை அடைந்து கொண்டது.

இதேநேரம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் டோட்டியில் ஆடியதன் மூலம் நதன் லயன் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முதல் சுழல் பந்துவீச்சாளராக சாதனை செய்திருந்தார். இந்த சாதனை மேற்கொள்ளப்பட்ட போட்டியிலேயே நதன் லயனிற்கு துரதிஷ்டவசமாக உபாதையும் ஏற்பட்டிருக்கின்றது.

நதன் லயன் இல்லாத நிலையில் அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இருந்து டொட் மேர்பியிற்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் அறிமுகம் பெற்ற 22 வயது நிரம்பிய டொட் மேர்பி 15 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேர்பி தனது அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களையும் சாய்த்து ஜொலித்தமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்தில் மேலதிக துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக இணைக்கப்பட்ட மேட் ரேன்சாவ் ஆஸி. குழாத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார். மறுமுனையில் வேகப் பந்துவீச்சாளாரான மைக்கல் நெஷர் தனது வாய்ப்பினை தொடர்ந்தும் தக்க வைத்திருக்கின்றார்.

இதேவேளை அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ஹெடிங்லியில் (லீட்ஸ் இல்) எதிர்வரும் வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆஸி.டெஸ்ட் குழாம் (மூன்றாவது டெஸ்ட்)

டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹர்ரிஸ், மார்னஸ் லபச்சேனே, ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கீரின், மிச்சல் மார்ஷ், அலெக்ஸ் கெரி, பேட் கம்மின்ஸ் (தலைவர்), மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வூட், டோட் மேர்பி, ஸ்கொட் போலன்ட், மைக்கல் நெஷர், ஜிம்மி பேர்சோன்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<