அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிவிட்டு, நாடு திரும்பியுள்ள தமிழக வீரர் தங்கராசு நடராஜனை, அவருடைய சொந்த ஊரான சேலம் – சின்னப்பம்பட்டியில் உள்ள மக்கள் அமோகமாக வரவேற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் தன்னுடைய யோர்க்கர் பந்துகளால், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் நடராஜன் ஈர்த்திருந்தார். இவருடைய திறமையில் திருப்திக்கண்ட இந்திய கிரிக்கெட் அணி, அவரை வலை பந்துவீச்சாளராக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச்சென்றது.
சென்னை அணியுடன் இணையும் ரொபின் உத்தப்பா!
பின்னர், மற்றுமொரு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி உபாதை காரணமாக குழாத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், அந்த இடத்துக்கு நடராஜன் அழைக்கப்பட்டார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி பிரகாசித்தார்.
தொடர்ந்து T20I போட்டிகளில் அசத்தியிருந்த நடராஜன், உமேஷ் யாதவ், மொஹமட் சமி மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஆகியோரின் உபாதைகள் காரணமாக இறுதி டெஸ்ட் போட்டியிலும் விளையாடி அசத்தினார். இவ்வாறு, வலைப் பந்துவீச்சாளராக அணிக்குள் நுழைந்து தனது திறமையை வெளிக்காட்டிய நடராஜனை தமிழக மக்கள் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.
இந்தநிலையில், தொடர் வெற்றியை கைவசப்படுத்திய இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. பின்னர், மும்பையிலிருந்து பெங்களூர் சென்ற நடராஜன், பின்னர் கார் மூலமாக சேலத்தை அடைந்துள்ளார். இந்தநிலையில், ஒன்றுக்கூடிய சின்னப்பம்பட்டி கிராம மக்கள், நடராஜனுக்கு அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.
மக்கள் மற்றும் ரசிகர்கள் என அதிகமானோர் ஒன்றுகூடியதுடன், நடராஜனை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் மேளதாள இசையுடன் ஊர்வலம் அழைத்துச்சென்றுள்ளனர். இந்த வரவேற்பை கண்ட நடராஜன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“அனைவருக்கும் மிகுந்த நன்றிகள். இதுபோன்று உங்களின் ஆதரவு எனக்கு எப்போதும் தேவை. அதேநேரம், இந்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. எனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் கூறமுடியாது” என கூறி நடராஜன் மக்களை வணங்கியுள்ளார்.
நடராஜன் அவுஸ்திரேலியாவில் இருந்து திரும்பியுள்ள நிலையில், கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளின் படி, அவர் எதிர்வரும் 14 நாட்கள் சுயதனிமையில் இருக்கவேண்டும் என தமிழக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<