இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நசீர் ஹுசைன், கேட்ச் பிடிப்பதில் உலக சாதனை முயற்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
மிக உயரத்தில் இருந்து வீசப்படும் பந்தைப் பிடித்து கின்னஸ் சாதனை செய்வதற்கான ஏற்பாடுகள் லண்டனில் உள்ள புதுப்பிக்கப்பட்ட லோர்ட்ஸ் மைதானத்தில் செய்யப்பட்டிருந்தன. முதலில், மைதானத்தின் மேலே 32 மீட்டர் (104 அடி 11.8 அங்குலம்) உயரத்தில் இருந்து ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் பந்து வீசப்பட்டது. தரையை நோக்கி மணிக்கு சுமார் 74 மீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்த அந்தப் பந்தை, நசீர் ஹுசைன் பிடித்தார்.
பின்னர் இதைவிட அதிக உயரத்தில் இருந்து பந்தை பிடித்து புதிய சாதனையை பதிவு செய்ய முடிவு செய்தார். அதன்படி 45 மீட்டர் உயரத்தில் இருந்து (150 அடி) வீசப்பட்ட பந்தையும் பிடித்து அசத்தினார். இது புதிய கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது.
அதன்பின்னர் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்ட பந்தைப் பிடிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், உயரத்தில் இருந்து வந்த பந்தை அவரால் சரியாகக் கணித்துப் பிடிக்க முடியவில்லை.