பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நஸிர் ஜம்செத்திற்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (PCB) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒரு நாள், டி-20) விளையாடுவதற்கு தற்காலிக தடையினை விதித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்கு மாற்றமாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்பொழுது அவருக்கு இந்த தந்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்செத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் (PSL) தலைவர் நஜாம் சேதி நேற்று (13) தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கீழ்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
“பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), வாரியத்தின் விதிமுறைகளை மீறி செயற்பட்டதற்காக நஸிர் ஜம்செத்திற்கு அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடுவதற்கான தற்காலிக தடையை ஏற்படுத்தியுள்ளது “
தற்போது, ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில், முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றித்திற்காக சர்ஜீல் கான் மற்றும் காலித் லத்திப் ஆகியோர் கடந்த வாரம் அத்தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டனர்.
இவர்களின் வெளியேற்றத்திற்கும் நஸிர் ஜம்செத்தின் போட்டித் தடைக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கருதப்படுகின்றது. ஆனால், என்ன காரணத்திற்காக நஸிருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இன்னும் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை.
குறித்த தொடரில் இஸ்லாமாபாத் யூனைட்டட் அணியில் விளையாட ஓப்பந்தமான முஹம்மத் இர்பான், தற்போது முறைகேடு தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் எனவும் தெரிய வருகின்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் போட்டித் தடையினை பெற்றுக்கொண்ட வீரர்களில் மூன்றாவது நபராக இருக்கும் ஜம்செத், 2012 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2013ஆம் அண்டு ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதிகளில் ஒரு நாள் போட்டிகளில் விளாசிய சதங்களின் காரணமாக, பாகிஸ்தான் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான ஒரு நிலையான இடத்தினை தனக்கென தக்கவைத்துக்கொண்டிருந்தார்.
இடது கை துடுப்பாட்ட வீரரான ஜெம்செத், இறுதியாக பாகிஸ்தான் அணிக்காக 50 ஓவர்கள் உலக கிண்ணப் போட்டிகளில் பிரசன்னமாகியிருந்தார். எனினும், அத்தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தாத காரணத்தினால், பாகிஸ்தான் அணியின் குழாத்தில் தனக்கு இருந்த வாய்ப்பை அவர் இழந்தார்.
தற்பொழுது 27 வயதாகும் ஜம்செத், இதுவரையில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளதோடு, 48 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 31.51 என்கிற ஓட்ட சராசரியில் 1,418 ஓட்டங்களினை குவித்துள்ளார். அத்துடன் 18 சர்வதேச T-20 போட்டிகளில் விளையாடிய அவர், அதில் 363 ஓட்டங்களினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.