T20I கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்து நமீபியா வீரர் சாதனை

Tri-series In Nepal, 2024

252

நேபாளம் அணிக்கெதிரான T20i கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணியின் ஜேன் நிகோல் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதமடித்து, சர்வதேச T20i கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். 

நேபாளம் நாட்டில் நேபாளம், நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு சர்வதேச T20i கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த மூன்று அணிகளும் எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ள T20i உலகக் கிண்ணத் தொடரில் விளையாட உள்ளன. எனவே T20i உலகக் கிண்ணத்திற்கு முன்னோடியாக இந்த தொடர் நடைபெற்று வருகின்றது.   

இந்த நிலையில், நேற்று (27) நடைபெற்ற முதல் போட்டியில் நேபாளம் மற்றும் நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 4 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து 206 ஓட்டங்களைக் குவித்தது. 

அந்த அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகோல் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், சர்வதேச T20i கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். இப்போட்டியில் 36 பந்துகளை எதிர்கொண்ட அவர், 11 பௌண்டரிகள், 8 சிக்சர்கள் அடங்கலாக 101 ஓட்டங்களை எடுத்தார். 

இதன்மூலம் சர்வதேச T20i போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த நேபாளத்தின் குஷால் மல்லாவின் சாதனையை நிகோல் ஒரு பந்தில் தகர்த்தெறிந்தார். 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் மங்கோலியாவுக்கு எதிரான போட்டியின் போது நேபாளம் அணி சார்பாக மல்லா 34 பந்துகளில் குறித்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். 

இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 3ஆவது இடத்திலும், ரோஹித்; சர்மா (35 பந்துகள்) 4ஆவது இடத்திலும், செக் குடியரசைச் சேர்ந்த சுதீஷ் விக்ரமசேகர (35 பந்துகள்) இடம் பெற்றிருந்தனர் 

22 வயதான இடது கை துடுப்பாட்ட வீரரான இவர். 33 சர்வதேச T20i மற்றும் 36 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இது தான் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் ஆகும். இந்தப் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் 

எவ்வாறாயினும், 207 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்று 20 ஓட்டங்களினால் தோற்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<