2016/17ஆம் ஆண்டிற்கான பருவகாலத்தில் கொழும்பு கால்பந்து கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்த நாகூர் மீரா கடற்படை விளையாட்டுக் கழகத்தில் இணையும் முகமாக தனது கழகமான கொழும்பு அணியிலிருந்து விலகிக்கொள்கின்றார்.
நாகூர், கொழும்பு கழகத்தினை ஒரு பருவகாலத்திற்காக பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பதோடு, டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் கடந்த இரு பருவகாலங்களின் தொடர் வெற்றியாளர்களாகக் காணப்படும் கொழும்பு கால்பந்து கழகத்திலிருந்து இறுதி இரண்டு மாதங்களிற்குள் வெளியேறும் இரண்டாவது முக்கிய வீரராகக் காணப்படுகின்றார். இதற்கு முன்னதாக, ஏப்ரல் மாத ஆரம்பத்தில் கொழும்பு அணியிலிருந்து துவான் ரிஸ்னி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
சம்பியன்ஷிப் தொடரில், (வலது) மத்திய களவீரராக விளையாடியிருந்த நாகூர் தனது நிலைக்குரிய அந்த ஆட்டம் மூலம் பல தடவைகள் பொறுப்பான முறையில் செயற்பட்டிருக்கின்றார். மின்னல் வேகத்தில் பந்தினை கைக்கொள்ளும் ஆற்றலினை தன்னகத்தே வைத்திருக்கும் மீரா, தான் விளையாடும் போது அதிக வலுவுடன் எப்போதும் சோர்வின்றி காணப்படுகின்ற ஒரு வீரராகவும் திகழ்கின்றார். அவர் நடைபெற்று முடிந்த 15 போட்டிகள் கொண்ட டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் மூன்று கோல்களை பெற்றிருந்தோடு, அத்தொடரின் சூப்பர் 8 போட்டிகளில் பலம் மிக்க இராணுவப்படை விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு சிம்ம சொப்பனமாகக் காணப்பட்ட வீரர்களில் ஒருவராகவும் காணப்படுகின்றார்.
மேலும், கொழும்பு அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி நாகூரின் வேகமான ஆட்டத்தின் உதவியினை அடிப்படையாகக் கொண்டே எதிரணிகளுக்கு அழுத்தம் தரும் வகையிலமைந்த போட்டி நுணுக்கங்களை திட்டமிட்டிருந்தார். இவ்வகையான திட்டங்கள் வெற்றியடைந்த காரணத்தினால் நாகூர் மூலம் எதிரணிகளின் பின்களம் மற்றும் தடுப்புக்கள் பல தடவைகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன.
“போட்டிகளிற்காகவும், பயிற்சிகளிற்காகவும் பிரயாணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது ஒரு சிரமம் தரும் விடயமாக காணப்பட்டிருந்தது. அத்தோடு, எனது வாழ்க்கையில் ஒரு உறுதியினை முக்கியமாக என் குடும்பத்திற்காக நான் விரும்பினேன்.“ என நாகூர் மீரா உத்தியோகபூர்வமாக ThePapare.com இற்கு கருத்து தெரிவித்தார்.
“நான் கொழும்பு கழகம் சார்பாக விளையாடிய காலத்தில், அதன் முகாமைத்துவத்திற்குரியவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் மிகவும் வியக்கத்தக்கவர்களாக காணப்பட்டிருந்தனர். இன்னும் ரூமி அவர்கள் ஒரு நல்ல பயிற்றுவிப்பாளர் அத்தோடு, நான் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு விளையாடி சம்பியன்ஷிப் நாமத்தை எடுத்துக் கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. தற்போது கடற்படை அணியுன் இணைந்து அதற்கெதிரான சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கின்றேன்.“ என்று நாகூர் மேலும் தெரிவித்திருந்தார்.
1987ஆம் ஆண்டு பிறந்த நாகூர் மீரா நாவலப்பிட்டி புனித மரியாள் கல்லூரியில் தனது கல்வியினைப் பெற்றிருந்தார். அதிலிருந்து தொடர்ந்து யங் மேரியன்ஸ் விளையாட்டு கழகத்தில் இணைந்து விளையாடியிருந்த மீரா, 2006ஆம் ஆண்டில் ஜாவா லேன் விளையாட்டு கழகத்தில் சேர்ந்தார். அதிலிருந்து தொடர்ந்து அவ்வணிக்காக 2012ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 2008ஆம் ஆண்டில் தரமிறக்கப்பட்டிருந்த ஜாவா லேன் அணியின் வீரர்களில் ஒருவராகவும் அங்கம் வகித்திருந்ததோடு 2012ஆம் ஆண்டு சம்பியன் கிண்ணம் மூலம் அவ்வணி மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டிய போது அவ்வணியின் ஒரு அங்கத்தவராக காணப்பட்டிருந்தார்.
2009ஆம் ஆண்டு தனது 22ஆவது வயதில் தேசிய அணிக்காக கடமையாற்றும் வாய்ப்பினை மீரா பெற்றுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் அழைக்கப்பட்டு 2011ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை தேசிய அணிக்காக விளையாடியிருந்தார்.
இன்னும், நாகூர் 2013ஆம் ஆண்டு அப் கண்ட்ரி லயன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி 2015ஆம் ஆண்டிற்கான பருகாலத்தொடரில் மாலைதீவில் விளையாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
“நாகூர் ஒரு ஒழுக்கமான சிறந்த தொழில்முறை கால்பந்து வீரர். எங்கே எப்போது விளையாடினாலும், அது பயிற்சி ஆட்டமாக இருப்பினும் கூட தனது முழுத்திறமையையும் பயன்படுத்தி விளையாடக்கூடியவர். அவரிடம் இருந்து எந்த கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கவில்லை. காயங்கள் இருந்த போதிலும் அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாது முக்கியமான ஆட்டங்களில் எங்களுக்காக பாடுபட்டு விளையாடியிருக்கின்றார். நாங்கள் அவரை அதிகம் நினைவுகொள்வதோடு, அவரது எதிர் காலத்திற்காகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்“ என்று கொழும்பு அணியின் பயிற்றுவிப்பாளர் ரூமி கருத்து தெரிவித்தார்.