இலங்கையின் ஈட்டி எறிதல் சம்பியனான நதீஷா டில்ஹானி லேக்கம்கே பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஆரம்ப சுற்றுடன் வெளியேறினார். இதன் மூலம் இம்முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பும் ஏமாற்றத்துடன் நிறைவுக்கு வந்தது.
பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நேற்று (07) பிற்பகல் நடைபெற்ற பெண்களுக்கான ஈட்டி எறிதல் A குழு தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய டில்ஹானி லேக்கம்கே, 53.66 மீற்றர் தூரத்திற்கு எறிந்து கடைசி இடத்தைப் பெற்றார்.
தனது முதல் முயற்சியில் 53.66 மீற்றர் தூரத்தை எறிந்த டில்ஹானி, தனது இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தார். தொடர்ந்து மூன்றாவது முயற்சியில், அவர் ஈட்டியை 53.66 மீற்றர் தூரம் மட்டுமே எறிந்தார். இதன் காரணமாக, உலகின் மிகவும் திறமையான வீரர்களுக்கு முன்னால் அவர் கடைசி இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் ஆரம்ப சுற்றின் A குழுவில் 16 வது இடத்தைப் பிடித்த அவர் ஒட்டுமொத்த நிலையில் 32ஆவது இடத்தைப் பிடித்தார்.
- விதிமுறைகளை மீறிய அருண தர்ஷனவிற்கு ஏமாற்றம்
- ஓலிம்பிக் அரையிறுதிக்கு தகுதி பெற்று புது சரித்திரம் படைத்த அருண
- ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற தருஷி, டில்ஹானி
10 மாதங்களுக்கு முன்னர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் 61.57 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய இலங்கை சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்ற 37 வயதான டில்ஹானி, இலங்கையிலிருந்து ஒலிம்பிக்கிற்குச் சென்ற அதிக வயதுடைய வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்தார்.
இதன்படி, இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் பங்கேற்ற ஆறு வீர, வீராங்கனைகளில் ஐவர் முதல் சுற்றுடன் வெளியேறியதுடன், ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன மாத்திரம் அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<