மேற்கிந்திய தீவுகளில் இம்முறை நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் வரைவில், இலங்கை அணியின் எந்தவொரு வீரரும் அணிகளுக்காக கொள்வனவு செய்யப்படவில்லை.
கடந்தமுறை நடைபெற்ற கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் இலங்கை அணியின் 5 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இலங்கை T20 அணியின் தலைவர் லசித் மாலிங்க உட்பட இசுரு உதான, திசர பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கையில் உள்ளூர் போட்டிகள் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
ஆனாலும் இவர்களில் சீகுகே பிரசன்ன மாத்திரம் கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாடியிருந்ததுடன், ஏனைய 4 வீரர்களும், குறித்த தொடரில் பங்கேற்கவில்லை. இந்தநிலையில், இம்முறை இலங்கை கிரிக்கெட் அணியின் எந்தவொரு வீரருக்கும் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கரீபியன் ப்ரீமியர் லீக் வரைவுக்கு இம்முறை 537 வீரர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், முன்னணி வீரர்கள் பலர் எந்த அணிகளாலும் வாங்கப்படவில்லை. இதில், வரைவில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களில் பெயரிடப்பட்டிருந்த எந்தவொரு வீரரும் விலைபோயிருக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம், சி.பி.எல். வரைவுக்கு வெளியில் இருந்து அணிகள் 6 வீரர்களை தங்களது அணிக்குள் இணைத்துக்கொள்ளும் முறைமையை சி.பி.எல். அறிமுகப்படுத்தியிருந்தது.
SQUAD GOALS!!!
Who is winning #CPL20?
So much talent here, from the Caribbean and from around the world. #CPLDraft pic.twitter.com/xUeuiyVKla
— CPL T20 (@CPL) July 6, 2020
இம்முறை வரைவை பொருத்தவரை ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் மொஹமட் நபி, நேபாளத்தின் சுழல் பந்துவீச்சாளர் சந்தீப் லமைச்சேனே மற்றும் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் பென் டன்க் ஆகியோர் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு நடப்பு சம்பியன் பார்படோஸ் ட்ரைடென்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், க்ரிஸ் லின் இதே விலைக்கு சென்.கைட்ஸ் & நெவிஸ் பெட்ரியோட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை, கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை 48 வதயான ப்ரவின் தாம்பே பெற்றுள்ளார். இவர், ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸ் காரணமாக கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டிகள் ட்ரைடன்ட் & டொபேகோவில் எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதி முதல் செப்டம்பர் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்கள்
- நியூசிலாந்து – க்ளேன் ப்லிப்ஸ், இஸ் சோதி, கொலின் மன்ரோ, டிம் செய்பர்ட், ரொஸ் டெய்லர்
- இந்தியா – ப்ரவின் தாம்பே
- இங்கிலாந்து – ஹரி கார்னி, அலெக்ஸ் ஹேல்ஸ்
- அவுஸ்திரேலியா – க்ரிஸ் லின், பென் டன்க், பவாட் அஹமட், மார்கஸ் ஸ்டொய்னிஸ், க்ரிஸ் க்ரீன்
- ஆப்கானிஸ்தான் – ரசீட் கான், ரஹமதுல்லா குர்பாஸ், குவைஸ் அஹமட், நவீன் உல் ஹக், மொஹமட் நபி, நூர் அஹமட்
- பாகிஸ்தான் – அசிப் அலி, சுஹைல் தன்வீர், சையான் ஜஹன்ஜீர்
- தென்னாபிரிக்கா – டெப்ரைஷ் சம்ஷி, ரஸ்ஸி வென் டெர் டஸன், இம்ரான் தாஹிர், ரெய்லி ரொஸ்ஸோவ், கொலின் இங்ரம், என்ரிச் நோட்ஜே
- அமெரிக்கா – ரெயன் பெர்சாட், சன்னி சொஹல், மஹமட் அலி கான், ஜஸ்டீப் சிங்
- நேபாளம் – சந்தீப் லமைச்சேனே,
- ஜிம்பாப்வே – சிக்கண்டர் ரஷா, பீடல் எட்வர்ட்ஸ்
- கனடா – சா்ட் பின் ஷபார்
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க