டோனியின் தலைவர் பதவியை காப்பாற்றிய ஸ்ரீனிவாசன்

269
N.Srinivasan

இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் பதவியில் இருந்த போது, கடந்த 2011ம் ஆண்டு மகேந்திரசிங் டோனியின் தலைமை பதவியை, தன்னுடைய முழு அதிகாரத்தையும் வைத்து காப்பாற்றியதாக என்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஐசிசியின் மூன்று மிகப்பெரிய கிண்ணங்களை பெற்றுக்கொடுத்த டோனி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான அணித் தலைவர் என்ற பெயரினை பெற்றிருந்தார். இவ்வாறு மிகச்சிறந்த பணியை இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றியிருந்த இவர், நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார்.

>> சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டோனி

இந்தநிலையில் இந்திய அணி 2011ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை டோனியின் தலைமையில் வென்றிருந்த போதும், அதற்கு அடுத்து பெறப்பட்ட அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக டோனியை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தேர்வுக்குழுவினர் முடிவுசெய்திருந்ததாக என்.ஸ்ரீனிவாசன் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-0 என்ற டெஸ்ட் தோல்விக்கு பின்னர், தேர்வுக்குழுவினர் புதிய ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் ஒருவரை நியமிக்கும் எண்ணப்பாட்டை கொண்டிருந்துள்ளனர். ஆனால், குறித்த சந்தர்ப்பத்தில், இந்திய கிரிக்கெட் சபையின் சட்ட திருத்தத்தின் படி, ஒரு பதவியை கொடுப்பதற்கான அதிகாரம் கிரிக்கெட் சபை தலைவருக்கு இருந்துள்ளது.

எனவே, டோனியை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான விடயத்தில், அப்போதைய தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் குறுக்கிட்டு, டோனியின் இடத்தை நிரப்புவதற்கு அப்போது, மாற்றங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

“இந்தியா 2011ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. ஆனால், அடுத்து அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. அதனால், எமது தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவர் டோனியை ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கூறினார். ஆனால், எவ்வாறு டோனியை ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் பதவியிலிருந்து நீக்குவது?

டோனி உலகக் கிண்ணத்தை வென்றுக்கொடுத்திருந்தார். அதேநேரம், தேர்வுக்குழுவினரும் டோனிக்கு பதிலாக சரியான மாற்று தலைவர் தொடர்பிலும் அறியாமல் இருந்தனர். ஒரு விடுமுறை நாள் ஒன்றில், அப்போதைய கிரிக்கெட் சபையின் செயலாளராக இருந்த சன்ஜை ஜகடலே, தேர்வுக்குழுவினர் டோனியை தலைவராக நியமிக்க மறுக்கின்றனர் என்றார்.

அதேநேரம், தேர்வுக்குழுவினர் டோனியை தலைவராக இல்லாமல் வீரராக இணைத்துக்கொள்ளலாம்  என கூறிகின்றனர் எனவும் ஜகடலே குறிப்பிட்டார். ஆனால், நான் டோனிதான் தலைவராக செயற்படுவார் என, கிரிக்கெட் சபை தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அறிவித்தேன்” என ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீனிவாசன் தற்போது கிரிக்கெட் சபையின் தலைவராக இல்லாவிட்டாலும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளார். இந்தநிலையில், டோனி விரும்பும் வரை சென்னை அணிக்காக விளையாட முடியும் எனவும் குறிப்பிட்டார்.

>> Video – IPL தொடரின் மறுவடிவமா? LPL | Cricket Galatta Epi 32

“இப்போதிலிருந்து, டோனி விருப்பத்தின் படி, எப்போதுவரை வேண்டுமானாலும் சென்னை அணிக்காக விளையாட முடியும். சென்னை அணியின் வெற்றிப் பயணத்துக்கான முக்கிய காரணம் அவர் என்பதுடன், அவர் போட்டிக்கு வெளியில் எதனையும் சிந்திப்பதில்லை. எனவே, நாம் தொடர்ந்தும் ஒரே நோக்கத்துடன் செல்வோம்” என்றார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரி காசி விஸ்வநாதன், டோனி மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை அணிக்காக விளையாடுவார் என இந்த மாத ஆரம்பத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<