எனது வெற்றிக்கு மனைவி தான் காரணம்: வோர்னர் பெருமிதம்

530
Getty

பாகிஸ்தானுடனான போட்டியில் சதமடித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர், கஷ்டனமான காலப்பகுதியில் தனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கமளித்த தனது மனைவிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

வோர்னரின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…..

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று (12) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னரின் அதிரடி சதத்துடன் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 51 பந்துகளில் அரைச் சதம் கடந்த டேவிட் வோர்னர் 102 பந்துகளில் 11 பௌண்டரி, ஒரு சிக்ஸருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனவே, ஓராண்டு போட்டித் தடைக்குப் பின் சர்வதேச போட்டியில் களம் இறங்கிய டேவிட் வோர்னரின் முதல் சதம் இதுவாகும். குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக வோர்னர் இறுதியாக விளையாடிய மூன்று போட்டிகளில் தொடர்ந்து சதம் அடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

கடந்த 2017ஆம் ஆண்டு தடைக்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அசத்தி இருந்தார். அதன் பின் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கிண்ணத் தொடரில் அவர் விளையாடியிருந்தார்.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் ஓராண்டு தடையை அனுபவித்து மீண்டும் அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பிய வோர்னர், இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தானுடனான முதல் போட்டியில் விளையாடியிருந்தார்.

குறித்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற அவர், நேற்று நடைபெற்ற போட்டியில் அபார சதமடித்து 2ஆவது தடவையாகவும் இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

இந்த நிலையில் தனது வெற்றிக்கான காரணத்தை போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு டேவிட் வோர்னர் கூறுகையில், ”ஷ்டமான காலப்பகுதியில் எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போட்டித் தடைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேனா என நான் பயப்பட்டேன். ஆனால், எனது மனைவி கெண்டிஸின் ஊக்கப்படுத்தலினால் தான் இன்று இந்த இடத்தில் உள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

”மைதானத்துக்கு வந்தால் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை நான் நன்கு அறிவேன். அதேபோல என்னால் சிறப்பாகவும் விளையாட முடிந்தது. உண்மையில் நான் உற்சாகமாக இருந்தேன். அது ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. ஆனால், நிறைய ஓட்டங்களை குவிக்கவில்லை என நான் கருதுகிறேன்” என்றார்.

பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஓராண்டு போட்டித் தடைக்குள்ளாகிய டேவிட் வோர்னருக்கு, சர்வதேச கிரிக்கெட்டைப் போல அனைத்து வகையான உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், கனடா, கரீபியன், பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாட்டு டி-20 லீக் மற்றும் டார்வின் மற்றும் சிட்னி ஆகிய உள்ளூர் கழகங்களுடனான கிரிக்கெட்டில் வோர்னருக்கு விளையாடுவதற்காக வாய்ப்பு கிட்டியது. அத்துடன், தனது திறமையை நிரூபித்து மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பதற்கான கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

இது குறித்து கூறிய வோர்னர், ”எனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நான் பல்வேறு டி-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி உடற்தகுதியை நிரூபித்து வந்தேன். அதேபோல, ஓட்டங்களையும் குவித்தேன்.

எனினும், கழக மட்ட கிரிக்கெட்டில் அவ்வாறு ஓட்டங்களைக் குவிப்பது எனக்கு சவாலாக இருந்தது. ஏனெனில் ஆடுகளங்கள் வேகம் குறைந்ததாக இருந்ததால்  பல்வேறு தெளிவற்ற தன்மைகளை உணர முடிந்ததுடன், ஓட்டங்களைக் குவிப்பது கடினமாகவும் இருந்தது. உண்மையில் நான் அந்த சந்தர்ப்பத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

எனவே, அந்த கடினமான முறை தான் என்னை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வந்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பி வர வைத்தது. நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்.

இந்த வாய்ப்பிற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். அதேபோல, உலகக் கிண்ணத்தில் எங்களுக்கு முன்னால் என்ன நடக்கிறது என்பதை நான் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார்.

இதேவேளை, போட்டித் தடைக்குப் பிறகு மறுபடியும் அவுஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்படுவேனா என்று தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்த வோர்னர், அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பிய பிறகும் ஒருபோதும் தவறான வழியில் செல்லக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அத்துடன், முன்னாள் தொழில்முறை இரும்பு பெண்மணியான அவரது மனைவி தான் தனக்கு உந்துசக்தியாக இருந்தார் என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நான் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பி வருவேன் என நம்பிக்கையுடன் இருந்தேன். என் மனைவி மற்றும் குழந்தைகள் அதற்கு உறுதுணையாக இருந்தனர்.

அதேபோல, அவர்களிடமிருந்து எனக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பும் கிடைத்தது. குறிப்பாக, ஷ்டமான நேரங்களில் எனது மனைவிதான் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவளுடைய அர்ப்பணிப்பு நம்பமுடியாத ஒன்றாகும். அதேபோல, அவள் சுயநலமற்ற, ஒழுக்கமான பெண் ஆவாள்.

உண்மையில் நான் அவளுக்கு நிறைய நன்றிக் கடன் உடையவனாக மாறிவிட்டேன். அவள் ஒரு வலுவான பெண், அவள் என்னை கடந்த 12 மாதங்களாக தூங்க விடாமல் தொடர்ந்து பயிற்சிகளுக்காக அனுப்பி வைத்தாள். இது என் நிலைத் தன்மையையும், கடின உழைப்பையும் தக்க வைத்துக் கொண்டது” என வோர்னர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

எனவே, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்காக ஓராண்டு தடையில் இருந்த டேவிட் வோர்னர், இந்த சதத்தின் மூலம் தன் திறமையை மீண்டும் நிரூபித்து முழு உலகிற்கும் முன் உதாரணமாக மாறிவிட்டார் என்றால் மிகையாகாது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணி தமது அடுத்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்வரும் 15ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<