இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் தான் உள்ளிட்ட தரப்பினர் வெற்றி பெற்றால் நாட்டின் நலனை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுகின்ற நிர்வாகமொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தவைரும், இம்முறை தேர்தலில் உப தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
அத்துடன், தனது நிர்வாகத்தின் கீழ் நாட்டையும், அணியின் நலனையும் கருத்திற் கொண்டு விளையாடாத வீரர்களையும், சுயநலத்துக்காக மாத்திரம் விளையாடுகின்ற வீரர்களையும் அணியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கவுள்ள ரணதுங்க தரப்பினர்
ஊழல் மோசடிகள் அற்ற நிர்வாகத்தை முன்னெடுப்பதற்காகவும், பின்னடைவையும்…
உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் பங்கேற்ற பிறகு இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முன் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதியினைப் பெற்றுக்கொள்ளுமா என்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் இன்று பாரிய அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடங்களாக நான் கிரிக்கெட்டிலிருந்து சற்று ஒதுங்கியிருந்தேன். ஆனால், இனிமேலும் அவ்வாறு என்னால் இருக்க முடியாது. பொதுமக்கள் என்னிடம் தொடர்ந்து ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அதன்காரணமாக இம்முறை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் களமிறங்குவதற்கு தீர்மானித்தேன்.
நாம் இம்முறை தேர்தலில் ஓர் அணியாக களமிறங்கவுள்ளோம். அந்த அணியில் நான் விரும்பாத நபர்களும் இருக்கலாம். ஆனால் சூதாட்டத்துடன் தொடர்புடைய நபர்களோ, திருடர்களோ எமது அணியில் இல்லை. கிரிக்கெட்டுக்காக சேவையாற்றுகின்ற, கிரிக்கெட்டை விரும்புகின்றவர்கள் மாத்திரமே எமது அணியில் உள்ளனர்.
எனவே ஓர் அணியாக இம்முறை தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு இலங்கை கிரிக்கெட்டை மீளக்கட்டியெழுப்புவோம். அதேபோல, கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைத்த பணங்கள் எங்கு சென்றது என்பதை தேடுவோம். கடந்த காலங்களில் கிரிக்கெட்டுக்கு கிடைத்த பணங்களை கொள்ளையடித்தது யார் என்பதை முழு நாட்டிற்கும் காண்பிப்போம். அதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஐ.சி.சி ஊழல் மோசடி அலுவலகம் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ஜூன
சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு அலுவலகமொன்றை…
இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் குறித்து அமைச்சர் மேலும் கருத்து வெளியிடுகையில், இம்முறை உலகக் கிண்ணம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. எனவே உலகக் கிண்ணத்திற்கு முன் இலங்கை வீரர்களின் மனோநிலையை சீர்செய்ய வேண்டும்.
உண்மையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சியடைவதற்கு பிரதான காரணம் தகுதியில்லாதவர்கள் நிர்வாகத்திற்கு வருவதுதான். எனக்கு தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு. ஆனால் கிரிக்கெட் சட்டவிதிமுறைகளுக்கு அமைய என்னால் கிரிக்கெட் நிறுவன தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது. எனவே, இம்முறை தேர்தலில் உப தலைவர் பதவிக்கு போட்டியிட தீர்மானித்தேன். கிரிக்கெட் நிர்வாகத்தைப் போல கிரிக்கெட் வீரர்களின் மூளையையும் சீர்செய்ய வேண்டும். எமது வீரர்களின் ஒழுக்கம் தொடர்பில் மிகப் பெரிய பிரச்சினை உள்ளது. வீரர்களிடம் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் சரிசெய்து கொள்ளலாம். உண்மையில் பெரும்பாலான வீரர்கள் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள். இந்த அப்பாவி வீரர்களின் மனநிலையை முன்னாள் நிர்வாகிகள் தான் சீர்குலைத்தனர். அதேபோல, வீரர்களுக்கு தமது நாட்டுக்காக விளையாட முடியாவிட்டால் அவர்கள் கிரிக்கெட்டை விட்டு விலகிச் செல்ல வேண்டும். இந்நாட்டில் திறமையான பல வீரர்கள் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் நாம் இவையனைத்துக்கும் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<