T20 உலகக்கிண்ணத்தை வெல்லப்போகும் அணி எது? கூறும் முரளிதரன்!

ICC T20 World Cup 2022

4950

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், இம்முறை T20 கிண்ணத்தை வெல்லும் அணி தொடர்பில் எதிர்வுகூறியுள்ளார்.

T20 உலகக்கிண்ணத் தொடர் அடுத்த மாதம் 16ம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது. முதல் சுற்றின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் மோதவுள்ளன.

>> மேஜர் பிரீமியர் லீக்கில் ஓட்டக் குவிப்பில் சாதனை படைத்த நிஷான்

இந்தநிலையில் T20 உலகக்கிண்ணம் தொடர்பில் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் போட்டியை மாற்றக்கூடியவர்கள் என்ற விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவின் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன். எனவே அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் இதுவொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அவுஸ்திரேலியாவில் அதிகம் சுழல் இருக்காது. ஆனால், இந்த உலகக்கிண்ணத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவர். அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துவீசுவதற்கு இந்தியாவுக்கு போதுமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

அதேநேரம் இந்த T20 உலகக்கிண்ணத்தை பொருத்தவரை எந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது தொடர்பிலும் கூறியுள்ளார்.

“கிண்ணத்தை எந்த அணியும் வெல்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. காரணம் அணிகள் கடினமாக மோதுவதற்கு தயாராக உள்ளன. ஆனால், அவுஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதால், அவர்களுக்கு சற்று அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன” என சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்தின் சம்பியனாக முடிசூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<