பாதுகாப்பு பிரச்சினையின் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு திரும்பிய முஸ்பிகுர் ரஹீம்

220
Mushfiqur Rahim

ஜிம்பாப்வே அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் 16 பேர் கொண்ட டெஸ்ட் குழாம் இன்று (16) பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவினால் பெயரிடப்பட்டுள்ளது. 

இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடுவதற்காக பங்களாதேஷ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் ஒரு போட்டி கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடவுள்ளது.

2020 ஐ.பி.எல் தொடருக்கான முழு போட்டி அட்டவணை வெளியீடு

எதிர்வரும் மார்ச் மாத இறுதியில்…………..

இந்நிலையில் குறித்த சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (22) ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜிம்பாப்வே அணியின் டெஸ்ட் குழாம் கடந்த திங்கட்கிழமை (10) வெளியிடப்பட்டிருந்தது. தற்போது குறித்த தொடருக்கான பங்களாதேஷ் குழாம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் படி பங்களாதேஷ் டெஸ்ட் அணியின் தலைவராக தொடர்ந்தும் துடுப்பாட்ட சகலதுறை வீரரா மொமினுல் ஹக் செயற்படவுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இறுதியாக பாகிஸ்தான் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தது.

குறித்த பாகிஸ்தான் தொடருக்காக பெயரிடப்பட்டிருந்த 14 பேர் கொண்ட குழாத்திலிருந்து தற்போது ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்காக புதிதாக 6 வீரர்கள் குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், 4 வீரர்கள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் அடிப்படையில் சகலதுறை வீரரான மஹ்மதுல்லாஹ்வுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஓய்வு வழங்கியுள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான குழாமில் இடம்பெற்றும் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சௌமியா சர்கார் எதிர்வரும் சில தினங்களில் திருமண பந்தத்தில் இணையவுள்ள காரணத்தினால் அவர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியிலிருந்து விடுமுறை பெற்று சென்றுள்ளார். இதன் காரணமாக ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான குழாமில் அவர் இடம்பெறவில்லை.

மேலும், பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப் பந்துவீச்சாளர் ரூபல் ஹுஸைன் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அத்துடன் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான அல்-அமீன் ஹுஸைன் டெஸ்ட் போட்டிகளுக்காக தேர்வுக்குழுவினால் கவனத்திற்கொள்ளப்படவில்லை. இதனால் அவரும் டெஸ்ட் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்திருந்த பங்களாதேஷ் அணியின் முக்கிய அனுபவ துடுப்பாட்ட வீரரான விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம் பாகிஸ்தான் தொடரின் பின்னர் மீண்டும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, இரண்டு வீரர்களுக்கு கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அடிப்படையில் குழாமில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை பெண்கள் தோல்வி

ஐ.சி.சி. பெண்கள் உலகக் கிண்ண டி20……………

50 முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6 சதங்கள், 22 அரைச்சதங்களுடன் மொத்தமாக 3,267 ஓட்டங்களை குவித்துள்ள 23 வயதுடைய இளம் துடுப்பாட்ட வீரரா யாஸிர் அலி மற்றும் 11 முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள 20 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளரான ஹசன் மஹ்மூத் ஆகியோர் இவ்வாறு முதல் முறையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உபாதை காரணமாக கைவிடப்பட்டுவந்த வேகப் பந்துவீச்சாளரான தஸ்கின் அஹமட் மூன்று வருடங்களுக்கு பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அடிப்படையில் உபாதையிலிருந்து மீண்டு குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும், உடற்தகுதி பரிசோதனையில் பாகிஸ்தான் தொடரில் தவறவிடப்பட்ட சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் மீண்டும் டெஸ்ட் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

அண்மைக்காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பிரகாசிக்காததன் காரணமாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுடனான இரு டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக தவறவிட்ட பங்களாதேஷ் அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான முஸ்தபீசுர் ரஹ்மான் பங்களாதேஷில் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பிரகாசித்ததன் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களின் பின்னர் டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவர பாகிஸ்தான் சென்றுள்ள MCC

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும்……….

ஜிம்பாப்வே தொடருக்கான 16 பேர் அடங்கிய பங்களாதேஷ் டெஸ்ட் குழாம்  

மொமினுல் ஹக் (அணித்தலைவர்), தமீம் இக்பால், ஷைப் ஹஸன், நஜ்முல் ஹுஸைன், முஸ்பிகுர் ரஹீம், மொஹம்மட் மிதுன், லிட்டன் தாஸ், தைஜூல் இஸ்லாம், அபு ஜெயித், நயீம் ஹஸன், எபாதத் ஹுஸைன், தஸ்கின் அஹமட், மெஹிதி ஹஸன், முஸ்தபீசுர் ரஹ்மான், ஹஸன் மஹ்மூத், யாஸிர் அலி

ஜிம்பாப்வே பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தொடர் அட்டவணை.

  • 22 – 26 பெப்ரவரி – ஒரு போட்டி கொண்ட டெஸ்;ட் தொடர் – டாக்கா
  • 1 மார்ச் – முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சில்ஹெட்
  • 3 மார்ச் – இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சில்ஹெட்
  • 6 மார்ச் – மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி – சில்ஹெட்
  • 9 மார்ச் – முதலாவது டி20 சர்வதேச போட்டி – டாக்கா
  • 11 மார்ச் – இரண்டாவது டி20 சர்வதேச போட்டி – டாக்கா