பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யத் தயாராகும் முரளிதரன்

259

இலங்கையின் பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவானும், கிரிக்கெட் ஆலொசனைக் குழுவின் உறுப்பினருமான முத்தையா முரளிதரன் தெரிவித்தார். 

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய பணிப்பாளராக மூன்று ஆண்டுகால ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ள டொம் மூடி மற்றும் அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினர்களுடனான முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பு கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்றது.

>>அடுத்த பருவகாலத்திற்கான லெஜன்ட்ஸ் T20 இவ்வருட இறுதியில்

இந்த சந்திப்பின் போது பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் என்ன? என்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு முத்தையா முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,

“ஆலோசனைக் குழுவாக தனிப்பட்ட முறையில் எவருக்கும் எந்தவொரு பொறுப்புகளும் பிரித்து வழங்கப்படவில்லை. நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து அனைத்து தீர்மானங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.

உண்மையில் பாடசாலை கிரிக்கெட் தான் அனைத்துக்கும் முதல் அத்திவாரம். முதலில் பிள்ளையொருவர் கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பிப்பது அங்கு தான். எனவே, அதற்கான அத்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் மேலே செல்ல முடியும். இதற்காக நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள்.

தற்போது இலங்கை கிரிக்கெட் சபையில் டொம் என்ற நபர் உள்ளார். அவர் கடந்த ஒரு வருடங்களாக இலங்கையின் பாடசாலை கிரிக்கெட் தொடர்பில் ஆராய்ந்து பார்த்துள்ளார். தற்போது அவரது அறிக்கையும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இன்னும் சில அறிக்கைகளும் எமது கைகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

>>இறுதிப்போட்டியில் ஓட்டங்களை குவிப்பதற்கான காரணம் என்ன?

இவையனைத்தையும் நன்கு ஆய்வு செய்த பிறகுதான் பாடசாலை கிரிக்கெட் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். உண்மையில் நாங்கள் இந்தப் பதவிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன.

பாடசாலை கிரிக்கெட்டை விட இலங்கை தேசிய அணியில் பல பிரச்சினைகள் இருந்தன. குறிப்பாக, வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம் தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுத்தோம். அதேபோல, முதல்தர கிரிக்கெட் போட்டிகளின் உட்கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.

எனவே, மிகவும் குறுகிய காலப்பகுதியில் நாங்கள் முக்கிய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். ஆனால் இறுதி தீர்மானங்கள் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.

உண்மையில், பாடசாலை கிரிக்கெட் தொடர்பில் பேசுவதற்கு நாங்கள் முதலில் பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கல்வி அமைச்சுருடன் பேச வேண்டும். எனவே நாங்கள் நினைத்தபடி பாடசாலை கிரிக்கெட்டில் மாற்றங்களை செய்ய முடியாது.

>>ஒரே டெஸ்ட்டில் பல சாதனைகளை முறியடித்த PATHUM NISSANKA..!

இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து இந்த நாட்டின் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஆலோசனைகளையும், வேலைத்திட்டங்களையும் அதற்கான யோசனைகளையும் வழங்குவது தான் எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

தற்போது இலங்கை கிரிக்கெட்டுக்கு புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் எமது யோசனைகளை முன்வைப்போம். அவர் தான் இறுதி தீர்மானத்தை எடுத்து இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவிப்பார்.

எனவே, மிக விரைவில் இலங்கை பாடசாலை கிரிக்கெட் தொடர்பில் அவதானம் செலுத்தி மாற்றங்களை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<