இலங்கை கிரிக்கெட் விளையாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டும் செல்லும் நோக்கத்தோடு தான் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவில் இணைந்துகொள்ள தீர்மானித்ததாக இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவொன்று கடந்த வாரம் நியமிக்கப்பட்டது. அரவிந்த டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, ரொஷான் மஹானாம மற்றும் முத்தையா முரளிதரன் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
>>விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்
இந்த நிலையில், சர்வதேச கிரி;க்கெட் அரங்கிலிருந்து முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்ற பிறகு முதல்தடவையாக இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து கொண்டுள்ளார்.
இந்த புதிய பொறுப்பு குறித்து முத்தையா முரளிதரன் டெய்லி மிரெர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில்,
”நாங்கள் இலங்கை கிரிக்கெட்டை நிர்வகிக்க வரவில்லை. மாறாக, கிரிக்கெட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளை வழங்குவது தான் எமது பணியாக உள்ளது. நாங்கள் கலந்துரையாடி சிறந்த வேலைத்திட்டமொன்றை தயாரிப்போம். ஆனால், இதற்கான பிரதிபலனை ஒரே இரவில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இந்த சிறப்புக் குழுவில் 80 காலப்பகுதியில் இருந்து இலங்கை அணிக்காக விளையாடி அணிக்கு தலைமைத்துவம் வழங்கிய மூவர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல, 2015 வரை இலங்கை கிரிக்கெட்டுக்காக பல சேவையாற்றிய குமார் சங்கக்காரவும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார். இவர்களிடம் எண்ணிலங்கடாத திறமைகள் காணப்படுகின்றன.
>>இலங்கையின் கிரிக்கெட்டை கட்டியெழுப்ப ஐந்து வருடங்கள் செல்லும் – நாமல் ராஜபக்ஷ
எனினும், இந்தக் குழுவின் ஊடாக நாங்கள் பலதரப்பட்ட பரிந்துரைகளை முன்வைத்தாலும், அவை அனைத்தையும் பற்றி கலந்துரையாடிய பிறகு தான் இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதிக்காக கையளிப்போம்.
அதேபோல, கிரிக்கெட் விளையாட்டில் என்னை மிகவும் கவர்ந்த அல்லது நான் விரும்புகின்ற நபரோ, எதிரிகளோ எனக்கு கிடையாது. இங்கு இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வது தான் எமது குறிக்கோளாக அமைந்துள்ளது” என தெரிவித்தார்.
இதனிடையே, 2015 இற்குப் பிறகு இலங்கை கிரிக்கெட்டானது அதல பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முரளிதரன், உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுவதற்கான நிலைக்கு இலங்கை அணி தற்போது தள்ளப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அண்மைக்காலமாக நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்களின் போராட்ட குணம் இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் முரளிதரன் கருத்து வெளியிடுகையில்,
”வீரர்களிடம் ஒழுக்கம் இல்லாமை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்தைத் தொட்ட வீரர்களில் ஒருவராக இருந்ததால் இவ்வாறான இக்கட்டான நிலையில் இலங்கை கிரிக்கெட்டையும், இலங்கை அணி வீரர்களையும் கவனமாக பார்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. அதற்காக நாங்கள் முழுமையான பங்களிப்பினை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்குவோம்” என அவர் தெரிவித்தார்.
>>இலங்கை கிரிக்கெட் வீரர்களின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியானது
இதுஇவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட்டை வளப்படுத்தவும், அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட அரவிந்த டி சில்வா தலைமையிலான கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவினர் விளையாட்டுத்துறை அமைச்சரை (10) சந்தித்தார்கள்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் தொழில்நுட்ப குழுவின் உறுப்பினர்களான ரொஷான் மஹானாம, முத்தையா முரளிதரன், தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<