அவுஸ்திரேலியா அணி மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் இன்று தொடங்குகிறது.
துணைக்கண்டத்தில் அவுஸ்திரேலியா அணி பொதுவாக சிறப்பாக விளையாடியது கிடையாது. குறிப்பாக சுழற்பந்து வீச்சை சரியாக சமாளித்து விளையாடியதில்லை. துடுப்பாட்ட வீரர்கள் அதிக அளவில் திணறுவார்கள்.
அதேபோல் நேர்த்தியாகப் பந்து வீச மாட்டார்கள். இதை சமாளிக்க அந்தந்த நாட்டில் உள்ள பிரபலமான முன்னாள் வீரர்களைக் குறிப்பிட்ட அந்த தொடருக்கு மட்டும் ஆலோசகராக நியமிப்பார்கள்.
அப்படித்தான் அவுஸ்திரேலியா அணி இலங்கை சென்றதும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி முடிசூடா மன்னனாக விளங்கிய முத்தையா முரளீதரனை 10 நாட்கள் ஆலோசகராக வைத்துக்கொண்டது.
அவரும் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் நடக்கவிருக்கும் பல்லேகெலே மைதானத்திற்கு அவுஸ்திரேலியா வீரர்களுடன் சென்று பயிற்சிக்கான ஆடுகளத்தைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா கூறுகையில் ‘‘முத்தையா முரளீதரன் இலங்கை அணியின் முகாமையாளர் சரித் செனநாயகேவை அவமானப்படுத்தி விட்டு அவுஸ்திரேலிய வீரர்களுடன் பயிற்சி ஆடுகளத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
அவருடைய இந்த செயல் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்த விவகாரத்தை அவுஸ்திரேலியா அணியின் நிர்வாகத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுபோன்ற நிகழ்வு நடக்கக்கூடாது.
முரளீதரன் மைதான பராமரிப்பாளர்களை துச்சமென நினைத்து அவுஸ்திரேலிய வீரர்களை பயிற்சி ஆடுகளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஒரு சர்வதேச போட்டி தொடங்குவதற்கு முன் அந்த மைதானத்தில் உள்ள ஆடுகளத்தை பயன்படுத்தக் கூடாது என்பது விதிமுறை.
இதை அவர்கள் மீறி விட்டனர். பின்னர் இலங்கை அணியின் முகாமையாளரை முரளீதரன் எதிர்கொண்டபோது அவரைத் திட்டியுள்ளார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு யூடியூப் மூலம் முரளீதரன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சி அளித்தது குறித்து முரளீதரன் கூறுகையில் ‘‘நான் எனது தொழில்முறை வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன்.
நான் ஒரு துரோகி கிடையாது. எனது அனுபவத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை. ஆகவே, நான் என்னுடைய பங்களிப்பினை மதிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
மேலும், வெளிநாட்டு பயிற்சியாளரை நியமித்தது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கூறுகையில் ‘‘வெள்ளைக்கார பயிற்சியாளருக்கு 100 ரூபாய் கொடுத்தால், இலங்கை காரர்களுக்கு 20 ரூபாய் கொடுக்கிறார்கள். எங்களை மதிக்கவில்லை’’ என்றார்.
இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கும் முரளீதரனுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.