இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மஞ்சியின் அனுசரணையில் நடைபெற்று வரும், மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான இறுதிப்போட்டிக்கு Bitu Link மற்றும் இலங்கை மின்சார சபை அணிகள் தகுதிபெற்றுள்ளன.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை விமானப்படை விளையாட்டு கழகங்களுக்கான முதல் அரையிறுதிப்போட்டியில் மோதியிருந்தன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இலங்கை மின்சார சபை அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பெற்றுக்கொண்டது.
மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட அரையிறுதியில் முன்னணி அணிகள்!
போட்டியின் முதல் இரண்டு செட்களிலும், இலங்கை மின்சார சபை அணிக்கு, இலங்கை விமானப்படை அணி கடும் அச்சுறுத்தலை கொடுத்தது. முதல் செட்டை 25-22 என வெற்றிக்கொண்டதுடன், இரண்டாவது செட்டை 31-29 என விமானப்படை அணி கைப்பற்றியது.
மூன்றாவது செட்டிலிருந்து தங்களுடைய ஆதிக்கத்தை காட்டிய மின்சார சபை அணி 25-18, 31-29 மற்றும் 15-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டது.
இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பிட்டு லிங்க் (Bitu Link) மற்றும் இலங்கை இராணுவ விளையாட்டு கழகங்கள் மோதியிருந்தன. இந்தப்போட்டியின் முதல் செட்டை இராணுவ விளையாட்டு கழகம் 25-22 என வெற்றிக்கொண்டது.
ஆனால், அடுத்தடுத்த செட்களில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய Bitu Link அணி, இராணுவ விளையாட்டு கழகத்துக்கு எந்தவொரு இலகுவான வாய்ப்புகளையும் விட்டுக்கொடுக்கவில்லை.
மிகச்சிறந்த திறமையை வெளிக்காட்டிய Bitu Link அணி 25-20, 25-18 மற்றும் 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் செட்களை கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
குறித்த இந்த போட்டிகளை தொடர்ந்து மூன்றாவது இடத்துக்கான போட்டி நேற்று (2) நடைபெற்ற நிலையில், விமானப்படை மற்றும் இராணுவ விளையாட்டு கழகங்கள் மோதின. இந்தப் போட்டியில், இராணுவ விளையாட்டு கழகம் 25-21, 25-21 மற்றும் 25-21 என்ற புள்ளிகள் கணக்கில் 3-0 என செட்களை கைப்பற்றி வெற்றியை பெற்றுக்கொண்டது.
இதேவேளை, Bitu Link மற்றும் இலங்கை மின்சார சபை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி எதிர்வரும் 13ம் திகதி, மஹரகமவில் உள்ள தேசிய இளையோர் சேவைகள் உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க