இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், மஞ்சியின் அனுசரணையில் நடைபெற்று வரும், மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
நேற்றைய தினம் (27) லீக் போட்டிகள் நிறைவுக்குவந்துள்ள நிலையில், இலங்கை மின்சார சபை கழகம், இராணுவ விளையாட்டு கழகம், விமானப்படை விளையாட்டு கழகம் மற்றும் Bitu Link விளையாட்டு கழகங்கள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
>> மஞ்சி மகளிர் சுப்பர் லீக் அரையிறுதியில் மோதுவுள்ள அணிகள்!
நேற்று (27) நடைபெற்ற லீக் சுற்றின் இறுதிப் போட்டிகளுக்கு முன்னர், இலங்கை மின்சார சபை விளையாட்டு கழகம் மாத்திரம் அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்த நிலையில், ஏனைய அணிகள் நேற்றைய தினம் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டன.
குழு ஏ யிற்கான நேற்றைய போட்டியில், இராணுவ அணியை எதிர்கொண்ட, இலங்கை மின்சார சபை அணி, 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், இராணுவ அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது. இராணுவ அணி 25-22, 21-25, 25-19 மற்றும் 25-19 என்ற செட்கள் கணக்கில் வெற்றியை பெற்றது.
அதேநேரம், குழு ஏ யில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஓசியன் லங்கா மற்றும் கடற்படை அணிகள் மோதியிருந்தன. இந்தப்போட்டியில் ஓஷன் லங்கா அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்ற போதும், அரையிறுதிக்கான வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டது.
பி குழுவில் கடினமான போட்டி ஏற்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், Bitu Link மற்றும் விமானப்படை அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டன.
Bitu Link அணி, துறைமுக அதிகார சபை அணியை 26-24, 25-21 மற்றும் 25-22 என 3-0 என்ற செட்கள் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதுடன், விமானப்படை அணி 25-16, 26-24, 25-21 மற்றும் 25-20 என 3-1 என்ற செட்கள் கணக்கில் வாசனா பேக்கர்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
குழு ஏ இற்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை மின்சார சபை மற்றும் இராணுவ விளையாட்டு கழகங்கள் தலா 3 வெற்றிகளுடன் 9 புள்ளிகளை பெற்றுக்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியதுடன், குழு பி யில் Bitu Link அணி 4 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்றுக் கொண்டதுடன், விமானப்படை அணி 3 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இவ்வாறான நிலையில், மஞ்சி தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் ஆடவருக்கான அரையிறுதிப் போட்டிகள் இன்றைய தினம் (28) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க <<