மாலிங்கவை மீண்டும் நிராகரித்த மும்பை இந்தியன்ஸ் அணி

5935
BCCI

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான அவுஸ்திரேலியாவின் பெட் கம்மின்ஸ் முதுகு உபாதை காரணமாக, இந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். இவரின் இடத்தை நிரப்ப மும்பை அணி, தற்போது நியூசிலாந்தின் வேகப்புயலான அடம் மில்னேவை தெரிவு செய்திருக்கின்றது.

மில்னே ஒப்பந்தம் செய்யப்பட்டதனை நேற்று (15) மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் உறுதிப்படுத்தியிருந்தது. இதனால், மும்பை அணி கமின்ஸின் உபாதைக்காக அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவை விளையாட அழைக்கவுள்ளனர் என வெளியாகியிருந்த செய்திகளில் உண்மை இல்லை என தற்போது ஊர்ஜிதமாகியிருக்கின்றது. எனினும், மாலிங்க மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக (Bowling Mentor) செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெட் கம்மின்ஸின் உபாதையால் மாலிங்கவுக்கு மும்பை அணியில் வாய்ப்பு கிட்டுமா?

ஐ.பி.எல். அணிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் அடிப்படை விலையாக இந்திய நாணயப்படி 75 இலட்சம்  ரூபா தீர்மானிக்கப்பட்டிருந்த மில்னே இந்தப் பருவகாலத்தில் எந்த அணியினாலும் கொள்வனவு செய்யப்படாத ஒருவராக முன்னர் இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு பருவகாலங்களிலும், பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்திருந்த மில்னே, இதுவரையில் ஐந்து ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி ஓவர் ஒன்றுக்கு 9.35 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த சராசரியுடன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

அவுஸ்திரேலிய வீரரான கம்மிண்ஸ் தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின் போது ஏற்பட்ட உபாதையினால், இந்த பருவகாலத்திற்கான ஐ.பி.எல். போட்டிகளுக்காக இந்தியா பயணமாகவில்லை. இந்நிலையில், பெட் கம்மின்ஸ் இந்தப் பருகாலத்திற்கான ஐ.பி.எல். தொடரிலிருந்து முழுமையாக விலகுகிறார் என ஏப்ரல் 10 ஆம் திகதி கூறப்பட்டிருந்தது. “பெட் (கம்மின்ஸ்) தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது தனக்கு முதுகில் வலி இருப்பதாக கூறினார். எனவே, நாங்கள் அவரை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். இதன் போது அவரது முள்ளந்தண்டு எலும்பில் அளவுக்கு அதிகமான திரவப்பாய்ச்சல் இருப்பதனை அவதானித்தோம். இந்த நிலைமையை சீர் செய்யவும் இது இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடாமல் இருப்பதற்கும் அவருக்கு பந்துவீசுவதில் இருந்து சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகின்றது. இதனாலேயே, நாங்கள் பெட் கம்மின்சை ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட வைக்கவில்லை“  என அவுஸ்திரேலிய அணியின் உடற்பயிற்சி நிபுணர் டேவிட் பீக்லி கூறியிருந்தார்.

26 வயதாகும் மில்னே, மிகவும் வேகமாக பந்துகளை வீசக்கூடியவர் என்பதோடு பின்வரிசையில் துரிதமாக துடுப்பாடும் ஆற்றலையும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு, ஐ.பி.எல். தொடரில் இம்முறை காயம் காரணமாக வெளியேறிய ஒருவருக்கு பதிலாக அழைக்கப்படும் இரண்டாவது நியூசிலாந்து வீரர் அடம் மில்னே என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, றோயல் செலஞ்சர்ஸ் அணியில் உபாதைக்கு ஆளாகிய நேதன் கொல்டர் நைலுக்கு பதிலாக நியூசிலாந்தின் அதிரடி சகலதுறை வீரர் கோரி அன்டர்சன் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணத்தில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஓரே குழுவில்

இந்தப் பருவகாலத்தின் முதல் மூன்று ஐ.பி.எல். போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியினர் தொடரில் மோசமான ஆரம்பத்தைக் காட்டியிருக்கின்றனர். இந்த நிலையில், நாளை (17) அவர்கள் விராத் கோஹ்லி தலைமையிலான றோயல் செலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கின்றனர். மும்பையின் சொந்த மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பைத் தரப்பு விடயங்களை மாற்றும் விதத்தில் செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.