இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) T20 தொடரின் 69ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.
>>த்ரில் வெற்றியோடு பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்த லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ்<<
மேலும் இந்த வெற்றியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி IPL புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தினைப் பெற்றிருப்பதோடு, தாம் விளையாடிய 14 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் பிளே ஒப் சுற்றுக்கு செல்வதற்கான தமது வாய்ப்பினையும் தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான IPL போட்டி இன்று (21) மும்பை நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கியது.
அதன்படி முதலில் ஆடிய சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்கள் எடுத்தனர். அவ்வணியின் துடுப்பாட்டத்தில் மயான்க் அகர்வால் 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 83 ஓட்டங்கள் பெற, விவ்ரான்ட் சர்மா 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 9 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் எடுத்தார்.
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சில் ஆகாஷ் மத்வால் 37 ஓட்டங்களை விட்டுக் கொடுத்த போதும் 04 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 201 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி கெமரூன் கீரினின் அபார சதத்தோடும், ரோஹிட் சர்மாவின் அதிரடி அரைச்சதத்தோடும் 18 ஓவர்களில் 02 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை அடைந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியினை உறுதி செய்த கெமரூன் கீரின் தன்னுடைய கன்னி IPL சதத்தோடு 47 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் ரோஹிட் சர்மா 37 பந்துகளில் 56 ஓட்டங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவ்னேஸ்வர் குமார் மற்றும் மயான்க் டாகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகன் விருது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் கெமரூன் கீரினிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 200/5 (20) மயான்க் அகர்வால் 83(46), விவ்ரான்த் சர்மா 69(47), ஆகாஷ் மத்வால் 37/4(4)
மும்பை இந்தியன்ஸ் – 201/2 (20) கெமரூன் கீரின் 100(47)*, ரோஹிட் சர்மா 56(37), புவ்னேஸ்வர் குமார் 26/1(4)
முடிவு – மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுக்களால் வெற்றி
இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<