ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அல்ஷாரி ஜோசப்பிற்கு பதிலாக தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பியூரன் ஹென்ரிக்ஸை அணியில் இணைத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் மாலிங்க உள்ளிட்ட வீரர்களுக்கு விசேட விடுமுறை
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்று….
மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அல்ஷாரி ஜோசப், உபாதைக்குள்ளாகியிருந்த நியூசிலாந்து அணி வீரர் அடம் மில்ன்னிற்கு பதிலாக மும்பை இந்தின்ஸ் அணியில் இணைக்கப்பட்டார். தனது முதல் போட்டியிலேயே அபார திறமையினை வெளிப்படுத்திய இவர், ஐ.பி.எல். வரலாற்றில் அதிசிறந்த பந்து வீச்சினை பதிவுசெய்திருந்தார்.
ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஐ.பி.எல். அறிமுகத்தைப்பெற்ற இவர், முதல் போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்த பந்து வீச்சு பிரதியானது ஐ.பி.எல். வரலாற்றில் சிறந்த பந்து வீச்சு பிரதியாக பதிவானது.
எனினும், துரதிஷ்டவசமாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, ஜோசப்பின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. போட்டியின் 19வது ஓவரில் ஸ்ரேயாஷ் கோபால் அடித்த பௌண்டரியை தடுக்க முற்பட்ட போதே இவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்த பருவாகலத்தின் அனைத்து போட்டிகளிலும் இவரால் பங்கேற்க முடியாது என மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதற்கமைய தங்களுடைய மாற்று வேகப்பந்து வீச்சாளரை இன்றைய தினம் (23) மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. இதன்படி தென்னாபிரிக்க அணியின் பியூரன் ஹென்ரிக்ஸை அணியில் இணைத்துள்ளது. பியூரன் ஹென்ரிக்ஸ் கடந்த 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார்.
சென்னை இரசிகர்களுக்கு ஏமாற்றம்: IPL இறுதிப் போட்டி இடமாற்றம்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின்…
மொத்தமாக 7 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2014ம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்காக T20I போட்டிகளில் விளையாட ஆரம்பித்த பியூரன் ஹென்ரிக்ஸ் தொடர்ச்சியாக தென்னாபிரிக்க குழாத்தில் இடம்பெறாவிட்டாலும், இறுதியாக நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடர் வரை விளையாடியுள்ளார். அத்துடன், இவ்வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், தன்னுடைய ஒருநாள் போட்டிக்கான அறிமுகத்தையும் பெற்றுள்ளார்.
இவர், மொத்தமாக 10 T20I மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளதுடன், முறையே 16 மற்றும் ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியுள்ளார். அத்துடன், மொத்தமாக 64 T20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<