ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். (இந்தியன் ப்ரீமியர் லீக்) தொடரின் லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் (BCCI) இன்று (6) வெளியிடப்பட்டிருக்கின்றது.
IPL தொடரில் விளையாட முஸ்தபிசூர் ரஹ்மானுக்கு அனுமதி மறுப்பு
கொவிட்-19 வைரஸ் காரணமாக இந்த ஆண்டின் மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த 13ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இம்மாதம் 19ஆம் திகதி தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், ஐ.பி.எல். தொடரில் பங்கெடுக்கும் எட்டு அணிகளும் தற்போது ஐக்கிய அரபு இராச்சியம் சென்று பயிற்சிகளை ஆரம்பித்திருக்கின்ற போதும், தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலையிலேயே, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற இரு வாரங்களின் முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று அட்டவணையினை வெளியிட்டிருக்கின்றது.
வெளியிடப்பட்டிருக்கின்ற போட்டி அட்டவணையின் படி, ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் போட்டியில் எதிர்வரும் 19ஆம் திகதி நடப்புச் சம்பியனாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சுபர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் குறித்த போட்டி அபுதாபி நகரில் இடம்பெறவிருக்கின்றது.
அதேவேளை, அபுதாபி தவிர ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஏனைய லீக் போட்டிகள் நடைபெறும் நகரங்களாக துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில், டுபாய் நகரில் இடம்பெறவுள்ள முதல் லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் எதிர்வரும் 20ஆம் திகதி மோதவுள்ளதோடு, ஷார்ஜாவில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் எதிர்வரும் 22ஆம் திகதி சென்னை சுபர் கிங்ஸ், ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றது.
லசித் மாலிங்கவை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ்
இதேநேரம் வெளியிடப்பட்டிருக்கும் போட்டி அட்டவணையின் அடிப்படையில், ஐ.பி.எல். தொடரின் மாலை நேர லீக் போட்டிகள் இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கும், மதிய நேர லீக் போட்டிகள் மாலை 3.30 மணிக்கும் ஆரம்பமாகும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதேவேளை, ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் யாவும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி தொடக்கம் இடம்பெறவிருப்பதோடு, அதன் பின்னர் தொடரின் பிளே ஒப் சுற்று, இறுதிப் போட்டி என்பவை இடம்பெறும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை 2020ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் பிளே ஒப் சுற்று, இறுதிப் போட்டி என்பவற்றுக்கான போட்டி அட்டவணைகளை பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
ஐ.பி.எல். தொடரின் போட்டி அட்டவணையினை பார்வையிட
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<